இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், செப்டம்பர் 29, 2011

மனம்..!

மனம்..!
ஒரு வினோதம் .அதைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினால் குழம்பிப் போவோம்!எவ்வளவுவிதமானஉணர்ச்சிகள்.? அன்பு, பாசம் உறவு,பகை,நட்பு,கோபம்,காதல்,காமம்,பழிவாங்கும்உணர்வு,பணிந்துபோகும்
நெளிவு,எதிர்த்துப்பேசும்துணிவு,ஆஸ்திகம்,நாத்திகம்,நயவஞ்சகம்,சூழ்ச்சி,
சண்டை,சமாதானம்,ஆசை,என வளர்ந்து கொண்டே போகும் அனைத்து எண்ணங்களுக்கும்,உணர்வுகளுக்கும்  ஆரம்பப் புள்ளி இந்த மனது தான் அல்லவா?
  
அதனால் தான் அனைத்து யோகிகளும், ஞானிகளும், ரிஷிகளும் மனதைக் கட்டுப் படுத்த வேண்டும் என்று கூறினார்கள். அவர்களாவது  கட்டுப் பாட்டிற்குள் மனதை வைத்திருந்தார்களா என்றால் இல்லை என்றுதான்கூறவேண்டும்!அவர்களுக்குவராதகோபமா,கொடுக்காதசாபமா?ஏன் அவர்களாலேயே கட்டுப் படுத்த முடியவில்லை?  ஒவ்வொரு உணர்சிகளுக்கும்,எண்ணங்களுக்கும் என்ன காரணம்?      

 ஒரு அழகான பெண்ணைப் பார்த்தால் மீண்டும் பார்க்கத்தூண்டுகிறது!சிலரைப் பார்த்தால் நட்பு கொள்ளத்தோன்றுகிறது. சிலரைப் பார்த்தால் எரிச்சல் (காரணமே இல்லாமல்) வருகிறது. எனக்கு அழகாகத் தோன்றும் பெண் என் நண்பனுக்கு அழகாகத் தோன்றுவதில்லை.யார் கண்களில் கோளாறு? 

ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்றார் புத்தர். ஆனால் அந்த ஆசைக்கே காரணம் இந்த மனம் தானே? 
ஆக,இந்த மனதினை அடக்கி நமது வழிக்குக் கொண்டு வந்து விட்டால் ....எல்லாதுன்பங்களில்இருந்தும்விடுதலை கிடைத்துவிடுமா?அப்படியென்றால் அதற்கு என்ன வழி?

இன்னும் அலசுவோம் ...!


செவ்வாய், செப்டம்பர் 27, 2011

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை...3

என்னைத்  தனியாக நிற்கச் சொன்னதும்  ஆங்காங்கே பேசிக் கொண்டிருந்த அனைவரும் பேச்சை நிறுத்தி விட்டு என்னைப் பார்த்தனர். எனக்கு என்னவோ போலிருந்தது.ஒரு ஓரமாகப் போய் நின்றேன்.புதியவர்களின் admission முடியப் போகும் நேரம்,கல்லூரியின் முதல்வர் உள்ளே வந்தார்.!
    
ஓரமாக தனியே நின்ற என்னைப் பார்த்த அவர், நீதான் முரளியா? என்றார்.முன் பின் தெரியாத என்னை அவர் சரியாகப் பெயர் சொல்லிக் கூப்பிட, எனக்கு மட்டும் அல்லாமல் அங்கிருந்த அனைவருக்கும், வியப்பும் ஆச்சர்யமும் உண்டானது.   நான் ஆம் என்று சொல்ல ,admission செய்துகொண்டிருந்தவர்களைப்  பார்த்து இந்தப் பையனுக்கு admission போட்டு விடுங்கள் என்றார்!  


அவர்கள் ,என் பெயர் பட்டியலில் இல்லாததைக் கூற  ,"ஆமாம், முரளியின் பெயர் இருக்காது." எனக் கூறி விட்டு மேலும் தொடர்ந்தார்."முரளி யின் பெயர் மெரிட் லிஸ்டிலேயே வந்திருக்க வேண்டும். ஒரு நாள் என்னவோ  திடீரென்று எனக்கு  admission னுக்கு தேர் வானவர்கள் பட்டியலையும் அவர்களின் தேர்வு மதிப்பெண்களையும் சரி பார்க்கத் தோன்றியது.அப்போது தான்  இந்த முரளி யின் பெயர் விடுபட்டுப் போனது தெரியவந்தது.ஆர்வமுடன் நுழைவுத் தேர்வு எழுதி பாஸான முரளிக்கு admission போடாதது உறுத்தலாக இருந்தது.அதனால் கடைசியாக கல்லூரிக் கோட்டாவில்  சேரவேண்டிய ஒரு அரசியல் புள்ளியின் சிபாரிசோடு வந்த மாணவன்  சேராததால் அந்த இடத்திற்கு முரளியைப் போடச்சொல்லிவிட்டேன். அதனால் தான்  பட்டியலில் முரளியின் பெயர் இல்லை" என்றார்.   
     
வழக்கமாக அவ்வளவு தீவிரமாக தேர்வானவர்களின் பட்டியலை யாரும் பார்க்க மாட்டார்கள்.அப்படியே பார்த்தாலும் மெரிட் லிஸ்ட் இன் மார்க்கினை வைத்து சரி பார்க்க மாட்டார்கள்.அப்படியே பார்த்தாலும் admission ஓடிக்கொண்டிருக்கிறது  இனி என்ன செய்ய?என விட்டு  விடுவார்கள்.இவைகளை எல்லாம் மீறி அவருக்கு ஏனோ ஒரு உறுத்தல் ஏற்பட்டு எனக்கும் எப்படியாவது சீட் தந்துவிட வேண்டும் என்று தோன்றி இருக்கிறது! இவையெல்லாம் எப்படி நடந்தது.....??

உங்களின் தீர்மானத்திற்கே  விட்டு விடுகிறேன்.

 ஆனால் ,அந்த ஒரே நாளில் என்னுடன் கல்லூரியில் சேர்ந்த எல்லாப் பிரிவு மாணவர்களுக்கும்-- ஏன், கல்லூரியின் முதல்வருக்கும் கூட இந்த முரளி பரிச்சயமானேன்!  பின்னாட்களில் ஒரு சிலர் என்னை "கோட்டா சீட் முரளி"-என்று கூடச்  செல்லமாகக்  கூப்பிடுவதுண்டு!     

     மீண்டும் வருவேன்..........






சனி, செப்டம்பர் 24, 2011

சிக்கு புக்கு !

"சிக்கு புக்கு"என்றொரு தமிழ் படம் பார்த்தேன்.என்ன ஒரு அருமையான நளினமான கதை. ஏனோ தானோ என- அதிக ஆர்வக்கோளாறு காரணமாக எடுத்துவிட் டார்கள் போல! எடிடிங் ,இசை, பாடல்கள், திரைக்கதை என அனைத்திலும் கோட்டை விட்டு விட்டார்கள்.ஏன் தலைப்பிலேயே கூட கோட்டை விட்டு விட்டார்கள்!

மெல்லிய நீரோடை போன்ற கதைக்கு" சிக்கு புக்கு"  என டைட்டில்.என்ன ரசனையோ?.டைட்டில் ஐப் பார்த்தாலே யாரும் உள்ளே போகப் பயப்படுவாகளே ஐயா!  

ஆர்யா ,ஸ்ரேயா இருவரின் நடிப்பும் வீணாகி விட்டது.காதலுக்கு மரியாதை,மௌன ராகம் போல க்ளைமாக்ஸ் இல் உருக்கி எடுத்திருக்க வேண்டாமா?
அப்பா ,மகன் இரண்டு ஆர்யாவையும் மிகச்சரியாக் திரைகதையில் காட்டி பார்ப்பவர்களை கலங்கடித்த்ருக்க வேண்டாமா?

ஒரே ஆறுதல் ஒளிப்பதிவு மட்டும் தான்.

வாரணம் ஆயிரம் படத்திற்கு நிகரான அற்புதமான கதை. கோட்டை விட்டு விட்டீர்களே புண்ணிய வான்களே.

ரூம் போட்டு உட்கார்ந்து யோசித்திருக்க வேண்டாமா? வெற்றிப் படம் தந்திருக்கக் கூடிய நல்ல வாய்ப்பை நழுவ விட்டு விட்டீர்களே. (ஏதோ ஆங்கிலப் படத்தின் தழுவலாமே?)

அடுத்த முறை நல்ல கதை கிடைத்தால் discussion க்கு என்னையும் கூப்பிடுங்கள்...!

புதன், செப்டம்பர் 21, 2011

கிடைக்காததும் கிடைக்கும்...!

நான் எழுதுகின்ற ஆன்மீக நம்பிக்கைகள் சிலருக்கு இப்படியெல்லாம் நடந்திருக்குமா?எல்லாம் கட்டுக் கதை என்று தோன்றும்.இது நாத்திகம் பேசுபவர்கள் போல. 
சிலருக்கு சாதாரணமாக நடந்ததை கடவுளின் மேல் ஏற்றிகூறுவதாகத் தோன்றும்.இது கடவுளை மேம்போக்காக வேண்டுபவர்கள் கட்சி. 

வேறு சிலரோ நமக்கும் இது போல அதிசயங்களை செய்ய மாட்டாரா நாம் வணங்கும் கடவுள்? எனத் தோன்றும்.இவர்கள் கடவுளை  நம்பிக்கையுடன் வணங்குபவர்கள். 
நானும்  கிட்டத்தட்ட இந்த மூன்று நிலைகளிலும் இருந்திருக்கிறேன்!
முத்து படத்தில் ரஜினியின் ஒரு வசனம்.
"கிடைக்கிறது கிடைககாம இருக்காது.கிடைக்காமல் இருப்பது  கிடைக்காது!.--
நாம் "இனி கிடைக்காது.இனி எதுவும் நடக்காது "என முடிவு  செய்கிறோமே அதைக்  கிடைக்க வைப்பதுதான் அந்தக் கடவுள்!
மனிதனை நோய்களிலிருந்து,மரணத்திலிருந்து காப்பாற்றும் கடைசி அறிவியல் பூர்வமான எல்லை டாக்டர்கள் தான்.ஆனால் அந்த டாக்டர்களும் ஆச்சர்யப் படும் அளவிற்கு  ,மனப்பூர்வமான ஆழ்ந்த பிரார்த்தனைகளுக்குப் பிறகு ஒருவர் மீண்டு வந்தால் அதுதான் கடவுளின் கருணை.(எம் .ஜி.ஆர், சமீபத்தில் ரஜினி- நமக்குத் தெரிந்த உதாரணம்)இது- நோய் மரணத்திற்கு மட்டுமல்ல ,நம்மை விட்டுக் கை மீறிப் போகும் அனைத்து விஷயங்களுக்கும் பொருந்தும். கடவுளின் மீது முழு நம்பிக்கை வைத்து பிரார்த்தனை செய்து அதன் மூலம் நடக்காது என மற்றவர்களால் பார்க்கப் பட்ட விஷயம் நடந்துவிட்டால் ,கிடைக்கும் ஆனந்தத்தை அனுபவித்துப் பார்த்தவர்களால் மட்டுமே உணர முடியும்!
இதை பல முறை ஸ்ரீ ராகவேந்திரரின் கருணையினால் நான் அனுபவித்திருக்கிறேன்.  இதே போல ராகவா லாரன்ஸ்(முனி -பார்ட் 2  காஞ்சனா- லாரன்ஸ் தான்) கூட கூறியிருக்கிறார்!.....அது என்ன?அதைப் பிறகு பார்க்கலாம்.


மீண்டும் வருவேன்......                                 

செவ்வாய், செப்டம்பர் 20, 2011

இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் !

மேலே:மந்த்ராலயத்தின் முகப்பு வாயிலில்



திங்கள், செப்டம்பர் 19, 2011

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை...2..

                                         (அருள் பார்வை 1 ஐ ப்படித்து விட்டு மேலே வரவும் )
               
                                 மகான் ஸ்ரீ ராகவேந்திரரை சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் ராயர் என்றே அழைப்பார்களாம் .

ஸ்ரீ ராகவேந்திரருக்கு மிகவும் உகந்த வியாழக் கிழமை ,அவரின் கோவில் சென்று வணங்கிவிட்டு  வந்த என்னிடம் ,தபால் காரர் அந்த கடிதத்தைத் தந்தார்.ஆர்வம் ஏதுமின்றி அந்தக்  கடிதத்தைப் பிரித்துப் பார்த்தேன்.

           ஆச்சர்யம்..!  திருச்சி R .E .C .இலிருந்து B .E .Admission கடிதம்!!
                        
      என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.கண்களில்  ஆனந்தக் கண்ணீர்!எல்லோரிடமும் அந்தக் கடிதத்தைக் காட்டி மிகவும் சந்தோஷப்  பட்டேன்.ஏனென்றால் இப்போது போல முன்பு தனியார் கல்லூரிகளெல்லாம் அவ்வளவாக கிடையாது.B.E.சீட் கிடைப்பதும், படிப்பதும் அவ்வளவு சுலபம் அல்ல. அதுவும் திருச்சி ஆர்.ஈ.சி! இந்தியாவிலேயே மிகச்சிறந்த இன்ஜினியரிங் காலேஜ் வரிசையில்  மூன்றாவது இடம் அன்று.(இப்போது எப்படி?இபோதைய பெயர்-- N I T .?) 
காலேஜ் திறக்கும் நாளில், அன்றே காலையில்  சேரச்சொல்லி இருந்தது.
            காலேஜ் திறக்கும் அந்த நாளில்  மிகவும் ஆர்வத்துடன் காலேஜ் சென்றேன்..Administrative பிளாக் இன் பின்புறம் இருந்த ஆடிடோரியம் சென்று காத்திருக்கச் சொன்னார்கள்..அன்று காலேஜ்- ல் புதிதாக சேர்ந்த அனைத்துப் பிரிவு மாணவர்களும் வந்திருந்தார்கள்.நான் சிவில் இன்ஜினியரிங் பிரிவு.என்னுடன் கூட மற்ற பிரிவுகளிலும் கடைசி யாக சேர ஒரு இருபது  மாணவர்கள் போல  வந்திருந்தனர்

.புதியவர்கள் admission முடிந்ததும் காலேஜ் முதல்வர் வருவார் என்றும்,அனைவருக்கும் முதல் நாள் அறிமுக உரை நிகழ்த்துவார் என்றும்,மறுநாள் முதல் வகுப்புகள் ஆரம்பம் என்றும் கூறினார்கள்.

முன்பே சேர்ந்தவர்கள் எல்லோரும் ஆங்காங்கே குழுமி பேசிக் கொண்டிருக்க கடைசியாக admission லெட்டர் வந்தவர்கள் ஒவ்வொருவராக admission  ஆனார்கள்.என்முறை வந்த போது admission பட்டியலைப் பார்த்தவர்கள் பணம் வாங்காமல் என்னை ஒரு ஓரமாக நிற்கச் சொன்னார்கள்
       
        காரணம்... அவர்கள் கையிலிருந்த கடைசிப் பட்டியலில் என் பெயர் இல்லை... !

அற்புதங்கள் தொடரும்.........
   

வியாழன், செப்டம்பர் 15, 2011

ஸ்ரீரங்கம்-- 2 .ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை ...1

     ஏன் ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை 1 என தலைப்பு? ragavmurali பக்கத்தினை முதலில் படித்து முடித்துவிட்டு கீழே தொடரவும்.

 ஸ்ரீரங்கத்தில் ராகவேந்திர புரத்தில் இருக்கிறது ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனம் .நான் 80 களில் அங்கு செல்ல ஆரம்பித்தேன்.அப்போதெல்லாம் அந்த ஏரியா  ஸ்ரீரங்கத் துடனே சேர்த்தி கிடையாது.ஸ்ரீ ராகவேந்திரர்-- மந்த்ராலயத்தில் பிருந்தாவனப் பிரவேசம் செய்த நாளினை ஒவொவொரு வருடமும் ஆராதனை விழாவாகக் கொண்டாடுவார்கள்.அன்று பக்தர்கள் அனைவருக்கும் உணவு தருவார்கள்.அதற்கு நானும் செல்வேன். அப்படித்தான் நான் ராகவேந்திரர் ஆலயம் செல்ல ஆரம்பித்தேன்.ஆலயத்தைச் சுற்றிலும் முள் வேலி போடப்டப்பட்டிருக்கும். (இப்போது நல்ல சுற்றுச்சுவர் இருக்கிறது) கோவிலின் உட்புறம் கடைசியில் மலட்டு ஆறு ஓடும்.அதில் நான் குளித்திருக்கிறேன்.அதற்கு திருமஞ்சனக் காவேரி என்ற பெயரும் உண்டு.அதிலிருந்து தான் ஒரு காலத்தில் ஸ்ரீ ரங்ககனாதருக்கு திருமஞ்சனத்திற்கு நீர் கொண்டு செலவார்களாம்.அதனால் தான் அந்தப் பெயர் என கேள்விப் பட்டிருக்கிறேன்.இப்போதைய மக்கள் பெருக்கத்தினால் அந்த ஆறு கெட்டுபோய் விட்டது.
இப்போது வரையிலும் நான் அந்த பிருந்தாவனத்திற்குச் சென்று கொண்டிருக்கிறேன்.ரஜினிகாந்த் கூட இங்கு வருவதுண்டு.இப்படியாக ஸ்ரீ ராகவேந்திரரின் பக்தனானேன்.
                                       நான் B .E .படித்து என்ஜினீயர் ஆகவேண்டுமென்பது என் தந்தை யின் ஆசை.(அன்றைய காலகட்டத்தில் ஸ்ரீரங்கத்தின் புகழ் பெற்ற சமையற்கலைஞர் மணி அய்யர் தான் எனது தந்தை )நானும் அவரின்  ஆசையை நிறைவேற்ற திருச்சி R .E .C .மாலைக் கல்லூரியில் விண்ணப்பித்து entrance exam எழுதிக் காத்திருந்தேன்.தேர்வு முடிவுகள் வெளிவந்து BE சேர்க்கைக்கு தேர்வானவர்கள் பட்டிலைப் பார்த்தேன் .என் பெயர் இல்லை.!
பெரும் ஏமாற்றத்துடன் கண்களில் நீர் முட்டியது.என்னை விட சுமாராக படிக்கும் என் நண்பர்களுக்கெல்லாம் சீட் கிடைத்தது.எனக்கு கிடைக்கவில்லை.இரண்டொரு நாட்களில் அவர்கள் எல்லோரும் சேர்ந்துவிட்டார்கள்.காலேஜ் திறக்க நாளும் குறித்தாகிவிட்டது. என் தந்தை இறந்த அந்த ஆண்டிலேயே காலேஜ்- ல் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன்.நாட்கள் செலச்செல்ல எனது துக்கம் பெருகியது.ஸ்ரீ ராகவேந்திரரிடம் சென்று மனமுருக வேண்டலானேன்..
                                    அன்று ஒரு வியாழக்கிழமை  காலை  வேளை,   ஸ்ரீராகவேந்திரர் கோவில் சென்றுவிட்டு வீடு வந்தேன். தபால்காரர் என் கையில்  ஒரு கடிதத்தை தந்தார்.அவர் பெயர் ராய(ர்) அப்பன்.......!

அற்புதங்கள் தொடரும்......
             


செவ்வாய், செப்டம்பர் 13, 2011

ஸ்ரீரங்கம்!

எல்லோருக்கும் தன பிறந்த ஊர் ரொம்பவும் பிடிக்கும் தான்.ஆனால் ஸ்ரீரங்கம் போல வருமா?என் கூடப் படித்தவர்கள் சிலபேர் இன்னும் ஸ்ரீரங்கத்திலேயே இருந்து வருகிறார்கள்.நான் அவர்களைப் பார்த்து ரொம்பவும் பொறாமை படுவேன்.எங்கெங்கோ சுற்றி  வந்து விட்டேன்.இப்போது ஸ்ரீரங்கத்திலேயே மீண்டும் இந்த முரளி! ஆச்சரயம் தான். எல்லாம் ஸ்ரீ ராகவேந்திரர் அருள்.

 நான் எந்த ஊரில் வேலைப் பார்த்தாலும் ஞாயிறுகளில் ஸ்ரீரங்கம் வந்து விடுவேன். அப்போது எல்லாம் ஸ்ரீரங்கம் -சுஜாதா, ஸ்ரீரங்கத்து தேவதைகளில் எழுதியது போல அடையவளஞ்சான் வரைக்கும் தான்.இப்போதோ பரந்து விரிந்து விட்டது.காவேரிக்கரை ,கொள்ளிடக்க்கரை வரையிலும் மேற்கே கிட்டத்தட்ட மேலூர் வரையிலும் சென்று விட்டது! ஒரு அடிகூட நிலம் இல்லாமல் எல்லாம் அடுக்குமாடி வீடுகளாக ஆகிவிட்டது. ஸ்ரீரங்கத்தைப் பற்றி என்ன செய்தி வந்தாலும் அதைப் படித்துவிடுவேன்.கூகுள் ப்லோக்கேரில் கூட நிறைய படித்திருக்கிறேன்.அதில் ஒரு சுவாரஸ்யம் -v .s .மஹால் பற்றி ஒரு பக்கம் படித்தேன்.அதை வடிவமைத்துக் கட்டியது நானும் எனது நண்பன் திரு.ராஜசேகரனும் தான்!ஸ்ரீரங்கத்திலேயே மிகச்சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக மிகுந்த சிரத்தையோடு செய்தோம்.அதற்கு V .S .மஹால் பக்கத்தை வடிவமைத்த திருமதி  ப்ரீத்தி(பத்மினி ) ,அவர் சகோதரி திருமதி sriththi பரத் ஆகியோரும் அவரகளது தாயாரும் முக்கிய காரணமாக இருந்தார்கள்.இன்று அது ஸ்ரீரங்கத்தில் ஒரு சிறந்த திருமண மஹாலாக இருக்கிறது.அதன் திறப்பு விழாவின் போது பல முக்கிய புள்ளிகளும் வந்திருந்தார்கள்.அப்போது மேடையில் பேசிய நான் திருமதி ப்ரீத்தி அவர்களின் பெயரைக் கூற மறந்து விட்டேன்.அதனால் அவருக்கு என் மீது வருத்தம் கூட ஏற்ப்பட்டது.அதை இந்த வலை மூலம் போக்கிவிட்டேன் என நம்புகிறேன்.அன்று ஒரு ஆயிரம் பேர்களின் முன் அவர் பெயரைக் கூற மறந்த நான் இன்று  உலகம் முழுவதும் பார்க்கும் வண்ணம் எழுதி விட்டேன்!

பின்னர் தொடருகிறேன்...

திங்கள், செப்டம்பர் 12, 2011

ரொம்ப நாளாச்சு-- மங்காத்தா!

Ragavmurali தான் நினைத்தாலே இனிக்கும் உள்ளே வந்து  விட்டேன்.நேற்று இரவு முயற்சி செய்தேன் BSNL பழி வாங்கி விட்டது. 
     .மங்காத்தா படம் பார்த்தேன்.மாறுபட்ட அஜித் .மாறுபட்ட கதை ஹீரோ வே இல்லாத வித்தியாசமான கதை கிட்டத்தட்ட ஏற்கெனவே கையாளப்பட்ட பணப் பெட்டியையோ விலைஉயர்ந்த வைரத்தையோ கடத்தி பணக்காரனாக முயலுவார்களே அதே கதை.பழைய வைரம் அப்புறம் மணிரத்னத்தின் திருடா திருடா .அந்த இரண்டும் பெறாத வெற்றியை இது பெற்றுள்ளது.காரணம் அஜித்.இமேஜ் ஐ தள்ளிவைத்து விட்டு அட்டகாச வில்லனாக அமர்க்களப் படுத்துகிறார். எத்தனை நாள் தான் நல்லவனாகவே நடிக்கிறது ?என்று வேறு டயலாக் !முதலில் சீன்கள் ஓடும் போது எதுவும் புரியவில்லை.பிறகு ஒவ்வொன்றாக முனனால் ஏன் அப்படி நடந்தது என புரிய  வைக்கப் படுகிறது.     புதிய யுக்தி ?படம் முடிந்துவிட்டது என்று எண்ணும் போது ஒரு ட்விஸ்ட்.சொன்னால் படத்தின் இன்டெரெஸ்ட் போய் விடும்.புதிய கதை  அமைப்பு வெல்டன் வெங்கட் !