இந்த வலைப்பதிவில் தேடு

மனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, டிசம்பர் 16, 2011

மனம்.....9 !

           நமது மனம் தானே நம்மை எண்ணி எண்ணி ஏங்கச் செய்கிறது? தரையில் படுத்தால் கட்டில் - மெத்தை இல்லையே என்ற ஏக்கம். நடந்து சென்றால் ஒரு டூ வீலர் கூட இல்லையே என்ற ஏக்கம். நம்மை நிம்மதி இன்றி அலையச் செய்கிறது நமது மனம் ! 

           எனது நண்பர் ஒருவர் என்னிடம் "நான்   மிகவும் நேசித்த ஒரு பெண் ,அவளும் என்னை நேசிப்பதாகக் கூறி கடைசியில் என்னை ஏமாற்றி விட்டாள்.இப்போது வேறு ஒரு பையனை மணந்து கொள்ளப் போகிறாளாம். எனக்கு மனசே சரியில்லை. அவளை மறக்க முடிய வில்லை  தற்கொலை செய்து கொள்ளலாம் போல  இருக்கிறது "என்று என்னிடம் கூறி வருத்தப் பட்டார்..  எனக்கும் நன்றாகத் தெரியும்  அவர்கள் இருவரும் சேர்ந்து பழகியது,சுற்றியது  எல்லாம். அவள் ஈசி யாக மறந்துவிடு என்று சொல்லிவிட்டாள்,ஆனால் இவரால்  மறக்க முடியவில்லை.பாவம்.  
       
    அவரிடம்  நான் கேட்டேன்,"  நீங்கள்  அவளை மிகவும் நேசிக்கிறீர்கள்  அல்லவா? "

"ஆமாம் ."  

"அவள் மீது உயிரையே வைத்திருக்கிறீர்கள்  அல்லவா?"

"ஆமாம்"

 " அப்படியானால் அவள் அல்லவா வருந்த வேண்டும்? நீங்கள் ஏன்    தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? உன் போல தன மீது உயிரையே வைத்திருக்கும் ஒருவரை  வேண்டாம் என்றால் அது அவளுக்கு அல்லவா நஷ்டம்? நீங்கள்  ஏன் வருத்தப் படுகிறீர்கள் ?இது போல மனநிலை கொண்ட ஒருத்தியை நீங்கள்  மணந்து  கொண்டாலும் உங்களால்  நல்ல வாழ்க்கையை வாழ முடியாது.அவள் உங்களை  மணந்து கொள்ளாததைப் பற்றி பின்னாளில் நிச்சயம் வருந்துவாள்.நீங்கள் உங்கள்  மனதை மாற்றிக் கொள்ளுங்கள் .கொஞ்சம் கஷ்டம்தான்  என்றாலும் இதை நீங்கள் செய்தே ஆக வேண்டும் " என்று கூறி அனுப்பினேன்.
    
   காலத்தின் போக்கில் மனதை மாற்றிக் கொண்ட அவர்,  இன்று வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்.

    மனிதர்கள் பலரும் இது போலத்தான் மற்றவர்களின் நடத்தைகளை  எண்ணி  மனம் வருந்திக் கொண்டிருப்பார்கள்.அல்லது தங்களையும் அதே போன்ற-நேர்மைக்கு மாறான - நடத்தைக்கு மாற்றிக் கொள்வார்கள்!

         நான் மிகவும் மதிக்கும்  நண்பர் ஒருவர் தனக்காக ஒரு கட்டிடம்  எனது மேற்பார்வையில் கட்டித் தருமாறு கேட்டுக் கொண்டார்.அவருக்கு கட்டிடத்  துறையில் அவ்வளவாக யாரையும் பழக்கம் இல்லாத தால் என்னிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தார். நான் அப்போது வேறு ஊரில் வேலை செய்து கொண்டிருந்ததால் சனி மற்றும் ஞாயிறு மட்டுமே என்னால்  வந்து பார்க்க முடியும்.எனவே  எனது  நம்பிக்கைக்கு  உரிய, நேர்மையான   கட்டிடப் பொறியாளர் ஒருவரிடம் அந்தப் பொறுப்பைத் தந்தேன்.அவர் எனது கல்லூரி கால நண்பரும் கூட. அவர் அங்கிருந்தே அந்தக் கட்டுமான பணிகளை பார்த்துக் கொள்ள நான் விடுமுறை நாட்களில் அவருடன் சேர்ந்து ஆலோசனைகளை செய்து அந்தக் கட்டிடத்தை கட்டிமுடித்தோம்.
          
            மிகவும் நல்லமுறையில் அந்தக் கட்டிடம் முடிந்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது.  

               ஆனால் பிறகு  எனது நண்பர் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் போக்கு முற்றிலும் மாறியது! அவர்களும் எனது பொறியாளர்  நண்பரும் சேர்ந்து தான் அந்தக் கட்டிடத்தைக்  கட்டியது போலவும் எனக்கு அதில் எந்த விதமான தொடர்பும் இல்லாதது போலவும் காட்ட ஆரம்பித்தனர். பின்னாளில் என்னைப் பற்றி யாரோ சிலர் அவர்களிடம் தவறாகக் கூற என்னிடம் பேசுவதையும் நிறுத்திக் கொண்டனர்!

           ஒரு சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் வீட்டில் ஒரு விசேஷம் நடந்தபோது  என்னை அழைக்காமல் மற்ற அனைவரையும் ,-அந்தப் பொறியாளர் நண்பர் உட்பட- அழைத்து விருந்து வைத்தனர். இதைப் பார்த்த எனது பிற நண்பர்கள் "உன்னைக் கூப்பிடவில்லையா ?அவர்களுக்கு நீ அறிமுகம் செய்து வைத்த  அந்தப் பொறியாளர் கூட  வந்திருந்தாரே, உனக்கு அழைப்பு இல்லையா? .உனக்கு அதில் வருத்தமாக இல்லையா? என்று கேட்டனர்.    

       நான் கூறினேன்."நான் எதற்கு வருத்தப் பட வேண்டும்?என்னைப்  பொறுத்த வரையில் நான் அவர்களுக்கு எந்தத் தீங்கினையும் செய்யவில்லை.அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் இன்று வரை நினைக்கிறேன் .இன்றும் அவர்கள் மீது மரியாதை வைத்திருக்கிறேன். என்னைக் கூப்பிடாத செயலால் அவர்கள் தான் வருத்தப்  பட வேண்டும்.நான் நானாகவே இருக்கிறேன்.அவர்கள்  தான் மாறிவிட்டனர். எனவே கவலைப் பட வேண்டியது அவர்கள் தான்- நான் அல்ல !" என்றேன்.
        
            நிறைய பேர்  இப்படித்தான். அவர் அப்படிச் சொன்னார்.இவர் இப்படிச் சொன்னார் .அவன் மட்டும் அப்படி இருக்கலாமா ?இவன் மட்டும் இப்படிச் செய்யலாமா?நான் மட்டும்  எதற்கு அப்படிச் செய்ய வேண்டும்? எனக்கென்ன தலை எழுத்து?என்று மற்றவர்களின் நடத்தையினைப் பற்றிக் கூறி, நேர்மையிலிருந்து தடம்  மாறி மனசாட்சிப் படி செய்யவேண்டியதைக் கூட செய்யாமால் இருந்து விடுகின்றனர்.

              மற்றவர்களுக்காக நீங்கள் ஏன்  மாற வேண்டும்?உங்கள் மனசாட்சி என்ன சொல்கிறதோ அதன் படி நடந்து கொள்ளுங்கள்.யாருக்காகவும் உங்கள் மனது சொல்லும் நல்லவைகளை செய்யாமால் இருந்து விடாதீர்கள்.

                ரோஜா என்றும் மென்மையாகவே தான் இருக்கிறது.முள் அருகினில்  இருப்பதைப் பார்த்து ரோஜாவும் முள்ளாக மாறி விடுவதில்லை. 

          நீங்களும் நீங்களாகவே இருங்கள். மற்றவர்களைப் பார்த்து நீங்களும்  முள்ளாக மாறவேண்டாம்.!

       மனதை  மாற்றுங்கள் ...... மகிழ்ச்சி பொங்கும்...என்றும் தங்கும்....!    

   இன்னும் அலசுவேன்....!      

திங்கள், டிசம்பர் 12, 2011

மனம்....8 !

                                     நமது வாழ்க்கையில் நடை பெரும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நமது மனம் தானே தீர்மானிக்கிறது.?எப்பொழுதோ நடந்ததை அல்லது யாரோ சொன்னவற்றை அடிப்படையாகக் கொண்டு முடிவுகள் தீர்மானிக்கப் படுகின்றன. அவை சரியாகவும்   போகலாம்.தவறாகவும் ஆகலாம்! இந்த விளாயாட்டு தான் வேண்டாம் என்கிறது ஜென். 

                                                     ஜென் மேலும் சொல்கிறது.நீங்கள் எதையும் தீர்மானிக்க வேண்டாம் நிகழ்வுகளை அதன் போக்கில் விட்டு விடுங்கள்.நடப்பவைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.ஏனெனில் முன்பே தீர்மானிக்கப் பட்டு விட்டவைகளை உங்களால் மாற்ற முடியாது.

                                                     மனதினை லேசாக்கிக் கொள்ளுங்கள்.உங்களால் தீர்மாக்னிக்க முடியாது. இது இப்படித்தான் நடக்க வேண்டும் என்று தீர்மானம் செய்யாதீர்கள். ஆனால் நீங்கள் உங்களுக்கு பிடித்தவைகளுக்கு முன்னுரிமை தர முடியும்.  இது எனக்குப் பிடித்திருக்கிறது. இப்படி நடந்தால் நல்லது. இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று  . இப்படி நினைக்கும் போது முடிவு எதிராக அமைந்தால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியும்.    
                                                     
                                    முன்னுரிமை தராமல் நீங்கள் முடிவு செய்து விட்டீர்கள்  என்றால்  முடிவு எதிராக அமையும் போது நீங்கள் மிகுந்த  ஏமாற்றம் அடைவீர்கள். அந்த ஏமாற்றம் உங்களை விரக்தி  அடையச் செய்யும். அதனால் கோபம் வரும்.கோபத்தின் விளைவுகள் விரும்பத்தகாதவையாக இருக்கும்!
                                   
                                    ஜென் துறவிகளைப் பற்றிக் கூறும் போது இப்படிச் சொல்வார்கள். அவர்கள் படுக்கையில் தான் உறங்குகிறார்கள். முட்களின் மீது படுப்பது இல்லை.ஆனால் படுக்கை கிடைக்காத போது அவர்கள் தரையில் படுத்து உறங்கவும் தயங்குவதில்லை.! 

                                                ஓஷோ அமரிக்காவில் இருந்த போது தினமும் விலைஉயர்ந்த  காரான ரோல்ஸ் ராய்ஸ் காரில் தான் செல்வாராம்.ஆனால் அவர் நாடு கடத்தப் பட்டு இந்தியாவிற்கு வந்தபோது புனேயில் ஆசிரமம் அமைத்தார். அங்கு அவர்  வெளியில் செல்லும் போது நடந்தே  செல்வாராம். இதை கண்ட வெளிநாட்டு நண்பர் ஒருவர் நீங்கள் அமெரிக்காவில் இருந்த போது விலைஉயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரில்தான் செல்வீர்கள்.இப்போது நடந்து செல்கிறீர்களே எப்படி உங்களால் முடிகிறது?என்று கேட்டாராம்.அதற்கு ஓஷோ,"அப்போது என்னிடம் கார் இருந்தது அதில் சென்றேன்.இப்போது கார் இல்லை.எனவே நடந்து செல்கிறேன்" என்றாராம்.  
  
                                                            இம்மாதிரியான பக்குவத்தைத் தான் நாம் பெற வேண்டும். இது இப்படி அமைந்தால் நன்றாக இருக்கும். இல்லாவிட்டாலும் பரவாயில்லை என ஏற்றுக் கொள்ளும் வகையில் மனதினை இலகுவாக்கிக் கொள்ளுங்கள்.

                                           அப்போது மகிழ்ச்சி பொங்கும்...என்றும் தங்கும்....!

   இன்னும் அலசுவேன்......
                                                         

சனி, டிசம்பர் 10, 2011

மனம்...7 !

           மனம்... எப்போதும் எண்ணி எண்ணி ஏங்குவது அதன் இயல்பு. இங்கிருந்து பார்த்தால் அந்தப் பக்கம் உள்ளது நன்றாக இருப்பதாகத் தோன்றுகிறது. அங்கிருந்து பார்ப்பவர்களுக்கு இங்கிருப்பது நன்றாக இருப்பதாகத் தோன்றுகிறது.ஆனால் எதிலுமே நிலையாக இருப்பதில்லை.
     

                     ஆசையில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்து எடுத்து விடுகிறோம்.இந்தப் பக்கம் அல்லது அந்தப் பக்கம். ஆனால் அதன் முடிவு தவறாகிப் போனால் கலங்கிப் போய் விடுகிறோம். எல்லாம் நாமாக உண்டாக்கிக் கொண்டது அல்லவா?.கடைசியில் எல்லாம் விதி என்று அதன் தலையில் போட்டு  விடுகிறோம். இந்த விளையாட்டு எல்லாம் வீண்.ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?இதுவா அல்லது அதுவா? முடிவை விதியின் கையிலேயே தந்து விடுங்கள். நீங்கள் எதையும் தேர்ந்தெடுக்க வேண்டாம். நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நடக்கட்டும். நல்லதாக இருந்தாலும் சரி.அல்லாததாக இருந்தாலும் சரி. நீங்கள் செய்யக் கூடியது எதுவும் இல்லை. 


                இவ்வாறு நீங்கள் எதையும் தேர்ந்தெடுக்காத போது நடப்பது தான் விதி. எல்லாம் தானாகவே நடக்கட்டும்.எல்லாம் ஏற்கெனவே எழுதப் பட்ட விதி அதை மாற்ற முடியாது. ஒரு சினிமா அல்லது ஒரு டிராமாவைப்  போல.ஏற்கெனவே கதையை எழுதி முடித்தாகி விட்டது ! எல்லாம் ஏற்கெனவே தீர்மானிக்கப் பட்டு விட்டது.முடிவு இப்படித்தான் என்று அதனை எழுதியவருக்குத்தான் தெரியும்.  கதை இப்படிச் செல்ல வேண்டும் என்று நீங்கள் தீர்மானம் செய்வது வீண். எல்லாம் முன்பே எழுதி  முடிக்கப் பட்டு விட்டது. நாம் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே.

              நீங்கள் இப்போதுதான் முதன் முதலாக ஒரு ஊருக்குச் செல்கிறீர்கள். ஆனால் அதற்கான பாதை ஏற்கெனவே போட்டாகிவிட்டது. நீங்கள் அந்தப் பாதையிலேயே செல்லவேண்டியது தான்.அடுத்தடுத்து எந்த ஊர் வரும்?மேடுவருமா,பள்ளம்வருமா? ஆற்றைத் தாண்ட வேண்டுமா? ட்ராபிக் ஜாம் ஆகுமா?எதுவும் தெரியாது.ஆனால் குறிக்கோள் நல்லபடி ஊர் சென்று சேர வேண்டும் என்பது தான். வகுக்கப் பட்ட பாதையை விட்டு வேறு பாதையை தேர்ந்தெடுப்பீர்களா? அப்படித் தேர்ந்தெடுத்தால் அது சரியாகவும் இருக்கலாம்.அல்லது தவறாகியும் போகலாம்.ஆனால் நீங்கள் அந்த ரிஸ்க் ஐ எடுக்க மாட்டீர்கள். ஏற்கெனவே போட்ட பாதை யில் தான் செல்வீர்கள்.

                                     நமது வாழ்க்கையும் அதே போலத்தான்.பிறப்பிலிருந்து இறக்கும் வரைக்கான  ஒவ்வொருவரது பாதையும் போட்டாகி விட்டது. நமது வேலை என்ன? அதில் பயணிப்பது தான்.நடுவில் தடத்தினை மாற்றிக் கொண்டு பிறகு துன்பம் வரும் போது ஏன் விதியின் மீது பழி போட வேண்டும்? இன்பமா வரட்டும்.துன்பமா அதையும் சந்திப்போம்.சண்டையா நடக்கட்டும்.சமாதானமா வந்துவிட்டுப் போகட்டும். நாம் எதையும் தேர்ந்தெடுக்க வேண்டாம். வாழ்க்கையை  அதன்போக்கில் விட்டு விடுவோம். ஒரு நதியைப் போல. நதி எதைப்  பற்றியும் கவலைப் படுவதில்லை. அதன் போக்கில் ஓடுகிறது.பள்ளமாக இருந்தாலும் சரி மேடாக இருந்தாலும் சரி.வளைந்து நெளிந்து சென்றாலும் சரி.அதற்கென  வகுக்கப் பட்ட பாதையிலேயே செல்கிறது.கடைசியில் கடலில் கலந்து விடுகிறது.  

            நாமும் அதைப் போல இருப்போம்.வாழ்கையை அதன் போக்கில் விட்டு விடுவோம். இன்பமென்று எதுவும் இல்லை.துன்பம் என்றும் எதுவும் இல்லை.மனம் என்னும் கோப்பையை காலி செய்து விடுவோம்..மனதை வெறுமையாக விட்டு விடுவோம் . எந்த எண்ணங்களும் வேண்டாம்.

                  மனதை மாற்றுங்கள். மகிழ்ச்சி பொங்கும்...என்றும் தங்கும்.!

 இன்னும் அலசுவேன்.....
                     

திங்கள், நவம்பர் 21, 2011

மனம்.....6 !

                     வினோதமான மனம் ! எண்ணிப் பாருங்கள், இந்த மனம் எண்ணுகின்ற எண்ணங்களில், அதன் மூலம் செய்யப் படும் செயல்களில் அதிகம் பாதிக்கப் படுவது மற்றவர்களாகத்தான் இருப்பார்கள் ! தங்களுக்குத் தாங்களே பாதிக்கப் படும் படியாக ஒருவரும் நடந்து கொள்ளமாட்டார்கள்! அப்படி நடந்துகொண்டால் அவர்கள் நிச்சயம் மன நலம் பாதிக்கப் பட்டவர்களாகவோ அல்லது பாதிக்கப் படப் போகிரவர்களாகவோ தான் இருப்பார்கள். ஏன் என்றால் யாரும் தங்களுக்கு பாதிப்பு உண்டாக்கும் எதையும்  நினைக்கவோ செய்யவோ மாட்டார்கள்.!

        ஏன் இம்மாதிரி எண்ணங்கள் மனதில் உண்டாகிறது?   எல்லாம் முற்காலத்தில் நடந்ததையோ  அல்லது யாரோ அவர்கள் மனதில் விதைத்து விட்டதையோ  மனதில் நிரப்பிக் கொண்டு  விட்டதால் ஏற்ப பட்டது.
   
அம்பிகாபதி படம் நேற்று பார்த்தேன். அம்பிகாபதி, அமராவதி  இருவரையும்  பிரிக்க நினைத்து,அமராவதியின் தந்தையான மன்னனும் மற்றவர்களும்  கடவுளின் மீது 100 பாடல்களை சிற்றின்பம்  சேர்க்காமல் அம்பிகாபதி பாடவேண்டும் என நிபந்தனை விதிக்கிறார்கள்.  கடைசியில்  அமராவதியைப் பார்த்த அம்பிகாபதி 99 பாடல்கள் முடிந்த நிலையிலேயே சிற்றின்பப் பாடலை பாடி விட, அம்பிகாபதிக்கு மரண தண்டனை விதிக்கப் படுகிறது.அவனுடன் கூடவே அமராவதியும் இறக்கிறாள்.

இதில் என்ன கண்டுவிட்டார்கள் மன்னனும் மற்றவர்களும் ? ஏன் இந்தக் கொடூர எண்ணம்? இருவரையும் வாழவிட்டு அவர்கள் சந்தோஷமாக வாழ்வதைப் பார்ப்பதில் கிடைக்கும் இன்பம் அவர்களை இறக்க வைத்து
பார்த்ததில் கிடைத்திருக்குமா?
  
லைலா,,மஜ்னு காதலும் ,சலீம் அனார்கலி காதலும்  கூட இப்படித்தான். மற்றவர்களை துன்பப் படுத்தி காணும் இன்பம் என்ன ஒரு கொடூரமான இன்பம்? ஏன் இவை எல்லாம்? 

இன்று இக் கதைகளைக் கேட்கும் யாரும்" பாவம்  இருவரையும் இணைத்து வைத்திருக்கலாம்" என்றே கூறுவார்கள்! ஆனால் யாரும் தங்கள் வீட்டில் இப்படி ஒரு காதல் கதை உண்டானால் ஏற்க மாட்டார்கள்! ஏன்? மனதில் நிரப்பிக் கொண்ட குப்பை எண்ணங்களே காரணம்!

வாழ்க்கையை ஒரு ஏரியல் பார்வையில் பார்க்கக் கற்றுக்  கொள்ளுங்கள்.
ஒரு ஏரோ பிலேனிளிருந்து கீழே பார்த்தால் எப்படி இருக்கும்? அதே போல நமது வாழ்க்கையில் நடந்ததையும்  மற்றவர் வாழ்க்கையில் நடந்ததையும்  பாருங்கள் !உங்களுக்கே சில நடந்தவை களையும் உங்கள் நடத்தைகளையும் ,  எண்ணங்களையும் பார்க்கும் போது சிரிப்பாகவும் வெட்கமாகவும்,வருத்தமாகவும் ஏன் தான் இப்படி நடந்து கொண்டோமோ என்றும் இருக்கும்! 

மனதில் நிரப்பிக் கொண்டதை கீழே கொட்டுங்கள்.மனதை காலியான கோப்பை ஆக்குங்கள். சிறிது  காலம் கழித்து அந்தக் கோப்பையையும் உடைத்து எறியுங்கள் ! 

மனதை மாற்றுங்கள்..நீங்களும் மகிழ்ச்சியாய் இருங்கள் .மற்றவர்களையும்  மகிழ்ச்சியாய் வைத்திருங்கள்.
 இன்பம் பொங்கும்....என்றும் தங்கும்......!

இன்னும் அலசுவேன் !

திங்கள், நவம்பர் 14, 2011

மனம்.......5 !

                  சென்ற அத்தியாயத்தில் சொன்னவாறு  பெற்றோருக்கு மட்டும் தான் தங்கள் பிள்ளைகளை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறதா? இல்லை.பிள்ளைகளுக்கும் அதே போலத்தான். தங்கள் தாய்  தந்தையரை மகிழ்ச்சியுடன் வைத்திருக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அவர்களுக்கும் உள்ளது. பிறர்  என்னசொல்லுவார்களோ என்று நினைத்து அவர்களின் மகிழ்ச்சிக்கு தடை போடும் பிள்ளைகளை நான் பார்த்திருக்கிறேன் . ஏன் இதெல்லாம் வருகிறது.?மற்றவர்கள் சொல்வதை எல்லாம்  மனதில் போட்டு நிரப்பிக் கொண்டு அதில் இருந்து  மீள முடியாமல் போவதால் வருவது இது.

     எனக்குத்தெரிந்து ஒரு 50 வயது நிரம்பியவர் தனது பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் மணம் செய்து கொடுத்து விட்டார்.மனைவியை இழந்த அவர்  தனி ஆளாக நின்று பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து திருமணமும் செய்து கொடுத்து விட்டார். இப்போது அவர் தனிமையில்.அவர் பிள்ளைகளோ அமரிக்காவிலும் பாம்பே யிலும்  செட்டிலாகிவிட்டார்கள்.இந்த வயதில்  அவருக்கு விவாகரத்து ஆனஒரு பெண்மணியிடம் அன்பு உண்டாக இருவரும் வாழ்க்கையில் இணைய முடிவு எடுத்த போது அவர்களின் பிள்ளைகள் அவரை படுத்தி எடுத்து விட்டனர். இந்த வயதில் உனக்கு இது தேவையா?எங்கள் மாமனார் வீட்டில் என்ன நினைப்பார்கள்.?உறவினர்கள் என்ன நினைப்பார்கள்? ஊரார் என்ன நினைப்பார்கள்? அப்படி இப்படி என அவரை ஒரு வழி பண்ணிவிட்டார்கள். 
        தங்களால் தங்கள் அப்பாவை அடிக்கடி வந்து பார்க்கமுடியாது அப்பாவுக்கு இனி அருகில் யாரும் இல்லை என்பதை நினைத்துக் கூட பார்ககமுடிய வில்லை அவர்களால். அவர்களுக்கு தங்கள் தந்தை தனது இறுதிக் காலத்தில் எப்படி இருப்பார் என்ற கவலை துளியும் இல்லை. அவர்களுக்கு வேண்டியது எல்லாம் வெளி உலகின் பார்வை பற்றித்தான்.   
              ஏன் என்றால் மற்றவர்கள் சொல்வதை எல்லாம் தங்கள் மனதில் அவர்கள் ஏற்றிக் கொண்டு விட்டார்கள்.அவர்களுக்கு அதில் இருந்து  மீண்டு வந்து எதார்த்தத்தை பார்க்கும் மனது இல்லை. அதனால் அவர்களுக்கு  தனது தந்தையின் எதிர் காலத்தைப் பற்றி யோசிக்கும் மனநிலை  உண்டாகவில்லை. தங்களது தந்தைக்கு எது நல்லதோ,எது மகிழ்ச்சியோ அதை ஆதரிக்க அவர்களுக்கு மனது ஒப்பவில்லை.
                                     ஒருவர் வயதான காலத்தில் வேறு ஒரு துணை யை நாடுவது தவறு என்றும் வயதான பிள்ளைகள் இருக்க வேறு திருமணம் செய்யக் கூடாது என்றும் வெளி உலகம் கூறிக் கொண்டிருப்பதை தங்கள் மனதில் ஏற்றிக் கொண்டு விட்டார்கள்.இப்போது அதை மீறுவதை பெரிய கவுரவக் குறைச்சலாக ஒரு போலியான எண்ணத்தை மனதில் ஏற்றிக் கொண்டு விட்டார்கள்! 
                     அவர்கள் ஏன் தங்கள் மனதை இவ்வாறு கட்டிப் போட்டுக் கொண்டு விட்டார்கள்? அவர்கள் வாழ்க்கையில் நன்கு செட்டில் ஆனபின் இப்போது தங்கள் தந்தை யின்  எதிர் காலத்தையும் அவரின் மகிழ்ச்சியையும்  ஏன் கவனத்தில் கொள்ளமுடியவில்லை.? மனம் தான் காரணம்!
               
  போலியான மனக் கட்டுப் பாட்டிலிருந்து வெளியே வாருங்கள்! மற்றவர்களின் மகிழ்ச்சியையும் பாருங்கள் . அவர்களுக்கு வேண்டியதை செய்யுங்கள்.அவர்களின் மகிழ்ச்சியை நீங்களும் பாருங்கள்.அவர்களுடன் அந்த மகிழ்ச்சியை கொண்டாடுங்கள்! அதுதான் வாழ்க்கை !
             
எல்லோரும் மகிழ்ச்சியுடன் வாழத்தானே வாழ்க்கை?
           
மனதை மாற்றுங்கள் ...மகிழ்ச்சி பொங்கும்...இன்பம் தங்கும்...!

இன்னும் அலசுவேன்.....!

செவ்வாய், நவம்பர் 01, 2011

மனம் ...4 !

                   சமீபத்தில் ஒரு செய்தி.ஒரு பெண்ணின் தந்தை நல்ல வேலையில் இருப்பவர்.தனது மகள் தனது ஜாதி அல்லாத வேறு ஜாதியைச் சேர்ந்த பையனை திருமணம் செய்ததால் ஆட்களை வைத்து அவரே தனது மருமகனை கொலை செய்து விட்டார். ஏன் என்றால் உலகம் அவரை கேலி செய்யுமாம்.அவரது மானம் மரியாதை எல்லாம் போய் விட்டதாம்.இத்தனைக்கும் பையனும் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த, நல்ல வேலையில் உள்ள பையன் தான்.ஆனால் ஊர் உலகம் என பயந்து மனம் பேதலித்து விட்டார். இப்போது அவர் மகள் கைம்பெண்,அவர் சிறையில் கொலை காரன் என்ற பட்டத்துடன்,அவர் மனைவி துணை இல்லாமல் தனியாக,பையனின் உறவுகளோ பையனை இழந்த சோகத்தில்.இவ்வளவும் ஏன்?ஊர் உலகத்திற்கு பயந்து தான்.!இப்போது ஊர் உலகத்திற்கு என்ன? அவரவர் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்விடுவார்கள்.யாருக்கு நஷ்டம்?


                   ஒரு உண்மையான தந்தை எப்படி இருக்க வேண்டும்? மகளுக்கு எது பிடிக்கிறதோ அதை செய்து தரவேண்டும்.தவறான முடிவுகளை எடுத்துச் சொல்லி  புரியவைக்கவேண்டும். நல்லமுடிவுகளை ஆதரிக்க வேண்டும்.இம்மாதிரி காதல் விஷயங்கள் கொஞ்சம் sensitive ஆன பிரச்சினைகள். அதனை நன்கு ஆராய்ந்து  ஒரு முடிவிற்கு வரவேண்டும். நல்ல பையன் நல்ல இடம் என்றிருந்தால் ஜாதி மதம் பார்க்காமல் முன்னின்று எடுத்து  செயல் படுத்த வேண்டும். மகளுக்கோ மகனுக்கோ மிகவும் பிடித்துப் போய் விட்டது என்றால் ,அவன்/அவள் கிடைக்கவில்லை என்றால் தான் உயிருடன் இருக்க மாட்டேன் என்று சொல்லும் அளவிற்குப் போய் விட்டால்,மகன்/மகள் வாழ்க்கையையே முதலாவதாகக் கொள்ளவேண்டும்.ஊர் உலகம் மானம் மரியாதை போன்ற தேவை இல்லாத வாதங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு மகன்/மகளின் மகிழ்ச்சியே குறிக்கோளாகக் கொண்டு அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.  அது மட்டுமல்லாமல் பின்னாட்களில் பிரச்சினைகள் வந்தால் நீதானே ஆசைப்பட்டா ய் என்னிடம் ஏன் வருகிறாய் என்று கூறாமல் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.அதுதான் உண்மையான அன்பு, பாசம்!இது மாதிரியான சமயங்களில் மற்றவர் சொல்லுக்கு மனதை அலையவிடாமல் நாம் நமது மகிழ்ச்சி ஒன்றையே பார்க்க வேண்டும். நமக்கு நமது மகிழ்ச்சிதானே முக்கியம்? உலகில் யாரும் கவலையுடனோ துக்கத்துடனோ வாழ விரும்புவதில்லை.ஆக,வெளிஉலகம் சொல்வதைக் கேட்கக் கூடாது-துன்பமும் சோகமும் வரும் என்றால்..வெளிஉலகம் சொல்வதைக் கேளுங்கள் உங்களுக்கு சந்தோஷமும், நிம்மதியும்,இன்பமும் கிடைக்குமென்றால்....!

  இன்னும் அலசுவோம்....!

வெள்ளி, அக்டோபர் 14, 2011

மனம் 3 ..!

இவ்வாறு மனதை காலிக் கோப்பையாக வைத்திருப்பது சுலபமானது அல்ல தான். ஒவ்வொரு நாளும் நாம் பார்க்கின்ற, கேட்கின்ற, பழகுகின்ற விதங்கள் நம்மை விடுவதில்லை.ஒவ்வொன்றும்  ஒவ்வொரு விதமாக நம்மை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன.அவற்றிற்கு ஏற்றார்போல நாமும் நமது எண்ணங்களையும் செயல்களையும் மாற்றிக் கொண்டே இருக்கிறோம்.சுருக்கமாகச் சொன்னால் வெளி உலகம் நம்மை ஆட்சி செலுத்துகிறது.

துன்பமும் ,இன்பமும் நம் மனதில்  தான் இருக்கிறது என சில ஞானிகள் சொல்வதுண்டு. அது எப்போது உண்மை என பிறகு பார்க்கலாம்.ஆனால் பொதுவாகப் பார்த்தால் அப்படி இருக்க முடியாது தான்.ஏனென்றால் புற உலகின் ஆதிக்கம் நம்மை கட்டுப் படுத்து கிறது.அதனால் தான் இந்தப் புற உலகிலிருந்து தப்பிக்க  பல ஞானிகளும் முனிவர்களும் காடு மலைகளையோ, இமயமலைகளையோ நாடிச் சென்று தவம் இருந்தர்கள்!
முல்லா கதை ஒன்று உண்டு.முல்லா ஒரு நாள் தன் மனைவி ,கழுதை,மற்றும் தன் உடமைகளை ஒரு மூட்டையாக  எடுத்துக் கொண்டு வேறு ஊருக்குச் சென்று கொண்டிருந்தார்.அப்போது வழியில் பார்த்தவர்கள் ,ஏனைய்யா,கழுதை தான் இருக்கிறதே மூட்டையை கழுதை மேல் வைத்துக் கொண்டு செல்லலாம் அல்லவா?நீ ஏன் சுமக்கிறாய் என்று சொல்ல ,முல்லாவும் மூட்டையை கழுதை மேல் வைத்துக் கொண்டு செல்கிறார்.இன்னும் சிறிது தூரம் சென்றதும் வேறு சிலர் முல்லாவிடம் ,ஏனய்யா கழுதை மேல் தான் இன்னும் இடம் இருக்கிறதே ஏன் உன் மனைவியை நடக்க வைக்கிறாய் ?அவளையும் கழுதை மேல் ஏற்றி விடய்யா என்று  கூற முல்லாவும் அவ்வாறே செய்கிறார்.இன்னும் சிறிது  தூரம் சென்றதும் வேறு சிலர் ஏனய்யா கழுதையை வைத்துக் கொண்டு நடந்து செல்கிறாய்?நீயும் கழுதை மேல் ஏறி உட்கார வேண்டியது தானே என்று கேட்க முல்லாவும் ஏறி உட்கார்ந்து கொள்கிறார்.இப்போது முல்லா ,அவர் மனைவி ,மூட்டை என அனைத்தையும் கழுதை சுமக்க இன்னும் சிறிது தூரம் செல்ல ,வேறு சிலர் முல்லாவிடம் ஏனய்யா இந்த நோஞ்சான் கழுதை மேலே இவ்வளவு சுமையை  ஏற்றிச் செல்கிறாயே என வினவ இப்போது மீண்டும் பழைய படி முல்லாவும் கீழே இறங்கி மூட்டை மற்றும் மனைவியுடன் நடந்தே செல்ல ஆரம்பித்தார்!  இன்னும் சிறிது தூரம் சென்றதும் வழியில் பார்த்தவர்கள் ஏனய்யா இந்த நோஞ்சான் கழுதை யை இப்படி இவ்வளவு தூரம் நடத்தியே கூட்டி வருகிறாயே இது பாவம் இல்லையா?என்று கேட்க கடைசியில் முல்லாவும் அவர் மனைவியும்  சேர்ந்து ஒரு மூங்கிலில் அந்தக் கழுதையைக் கட்டித் தொங்கவிட்டு இருவரும் சேர்ந்து அதை தூக்கிக் கொண்டு செல்கிறார் கள்! இப்படிப் போகிறது அந்தக் கதை.
வெளி உலகம் சொல்வதெற்கெல்லாம் செவிசாய்த்தால் முடிவு இப்படித்தான் போகும் என்பதற்காகத் தான் இந்தக் கதை.  

 அப்படி யானால் புற உலகை சார்ந்து,மற்றவர்கள் கூறுவதை நாம் ஏற்றுக் கொண்டு வாழக் கூடாதா?என்றால் ,நமக்கு அமைதியும்,நிம்மதியும்,சந்தோஷமும் வேண்டும் என்றால் கண்டிப்பாக செவி சாய்க்கக்  கூடாது...ஒரு சில விதி விலக்குகளைத் தவிர.....!      

 இன்னும் அலசுவேன்......

செவ்வாய், அக்டோபர் 04, 2011

மனம்.....2 !

 மனதை  அடக்க வழி உண்டா...?                        

முதலில் மனதைப் பற்றி புரிந்துகொண்டால் அதனை அடக்கும் வழியினைக் கண்டு கொள்ளலாம்!

ஜென் என்ன சொல்கிறது மனதைப் பற்றி? 

ஜென் சொல்கிறது மனதினை ஒரு கோப்பை என்று. அதாவது ஒரு கோப்பையில் நாம் எதை வேண்டுமானாலும் போட்டு நிறைத்துக் கொள்ளலாம். அதே போல நாமும் நமது மனம் என்னும் கோப்பையில் பலவற்றை பலவாறாகப் போட்டு நிரப்பி வைத்து விடுகிறோம்!  

 இன்னும் விளக்கமாகச் சொல்ல  வேண்டுமானால்  நாம் முன் பின் அறிந்திராத ஒரு நபர். அவரை நமக்கு- நமது நண்பர் அறிமுகம் செய்து வைக்கிறார் என்று கொள்வோம். அப்போது முதல் நமது மனம் என்னும் கோப்பையில் அவரைப் பற்றிய நினைவுகளை நிரப்பி விடுகிறோம்.எப்படி?நமது நண்பர் அந்த புதியவரைப் பற்றி என்னவெல்லாம் சொன்னாரோ அப்படியே.

நமது நண்பர் அவரைப் பற்றி நல்ல விதமாகச் சொன்னால் அவரை நல்லவராகவும் வேறு ஏதாவது கெட்ட விதமாகச் சொன்னால் அவரை கெட்டவராகவும் நாம் நம் மனதில் உருவகம் செய்து விடுகிறோம். அது முதல் அவரை அந்தக் கண்ணோட்டத்திலேயே பார்க்க ஆரம்பித்து விடுகிறோம்.  

எப்படி ஒரு கோப்பையில் டீயை ஊற்றி விட்டால் பிறகு அதில் காப்பியை யோ தண்ணீரையோ  ஊற்றமுடியாதோ அதே போல.

மீண்டும் அந்தக் கோப்பையில் காப்பி யையோ தண்ணீரையோ ஊற்ற வேண்டுமானால்  முதலில் அந்தக் கோப்பையை காலி செய்ய வேண்டும்.! 

அதே போல அந்த புதிய நபரைப் பற்றிய உண்மையான நிலை தெரிய வேண்டுமானால் நமது நண்பர் ,அந்தப் புதியவரைப் பற்றிக் கூறியதை முதலில் தள்ளி வைக்க வேண்டும்.அதன் பிறகு நாம் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள முயல வேண்டும்.

 இப்படி நாம் அவருடன் பழகிய பின்பு அவரைப் பற்றி எடை போட்டு அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு முடிவிற்கு வரவேண்டும்.சரி அவரைப் பற்றிய ஒரு முடிவிற்கு வந்துவிடோம். அவர் மிகவும் நல்லவர் என முடிவு செய்து விட்டோம்.
 இப்போது நமது மனம் என்னும் கோப்பையில் அவருக்கென்று உள்ள இடத்தில் அவரை நல்ல மனிதராக நிரப்பி விட்டோம்.இனி அவரை காணும் போதெல்லாம்  அவருடன் பேசும் போதெல்லாம்,அவருடன் பழகும் போதெல்லாம் அவரை மிகவும் நல்ல மனிதராகவே பார்க்கிறோம். 


 ஒரு நாள் அவர் நம் எதிர் பார்ப்புகளை மீறி நடந்து கொள்கிறார்..! ஐயோ அவரா இப்படி? நான் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவே இல்லை.இவருக்குப் பின் இப்படி ஒரு மனிதரா? என்று பலவாறாகப் புலம்புகிறோம்.அவரிடம் ஏமாந்து விட்டோமே என அழுகிறோம். ஏன் இப்படி நடக்கிறது?

இதற்குக் காரணம் நமது மனம் தான்! நமது மனதில் அவரை நல்லவராக உருவகம் செய்து விட்டோம். நாம் உருவகம் செய்ததற்கு மாறாக அவர் நடந்து கொள்ளும் போது நமது மனம் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. எப்படி காப்பி ஊற்றப் பட்டக் கோப்பையில் டீ யை ஊற்ற முடியாதோ அதே போல..!
  
எனவே ஏமாற்றம் அடைந்த மனம் பலவாறாகப் புலம்பு கிறது.

அப்படி என்றால் மனம் தரும் இம்மாதிரியான  துன்பங்களிலிருந்து  மீள வழியே இல்லையா?  உண்டு......!

ஓஷோ சொல்கிறார்...மனம் ஒரு கோப்பை என்றால் அதில் கண்டதையும்  போட்டு நீ நிரப்பி விடுகிறாய். பின்பு அதற்கு மாறாக நடக்கும் போது ஏமாற்றத்தினால் புலம்புகிறாய்.எனவே அந்தக் கோப்பையை நீ உடைத்து எரிந்து விடு.இப்போது உன்னிடம் மனம் என்ற ஒன்று இல்லை.அதில் எதையும் போட்டு உன்னால் நிரப்பவும் முடியாது............! !
  

 இன்னும் அலசுவேன்..........

 

வியாழன், செப்டம்பர் 29, 2011

மனம்..!

மனம்..!
ஒரு வினோதம் .அதைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினால் குழம்பிப் போவோம்!எவ்வளவுவிதமானஉணர்ச்சிகள்.? அன்பு, பாசம் உறவு,பகை,நட்பு,கோபம்,காதல்,காமம்,பழிவாங்கும்உணர்வு,பணிந்துபோகும்
நெளிவு,எதிர்த்துப்பேசும்துணிவு,ஆஸ்திகம்,நாத்திகம்,நயவஞ்சகம்,சூழ்ச்சி,
சண்டை,சமாதானம்,ஆசை,என வளர்ந்து கொண்டே போகும் அனைத்து எண்ணங்களுக்கும்,உணர்வுகளுக்கும்  ஆரம்பப் புள்ளி இந்த மனது தான் அல்லவா?
  
அதனால் தான் அனைத்து யோகிகளும், ஞானிகளும், ரிஷிகளும் மனதைக் கட்டுப் படுத்த வேண்டும் என்று கூறினார்கள். அவர்களாவது  கட்டுப் பாட்டிற்குள் மனதை வைத்திருந்தார்களா என்றால் இல்லை என்றுதான்கூறவேண்டும்!அவர்களுக்குவராதகோபமா,கொடுக்காதசாபமா?ஏன் அவர்களாலேயே கட்டுப் படுத்த முடியவில்லை?  ஒவ்வொரு உணர்சிகளுக்கும்,எண்ணங்களுக்கும் என்ன காரணம்?      

 ஒரு அழகான பெண்ணைப் பார்த்தால் மீண்டும் பார்க்கத்தூண்டுகிறது!சிலரைப் பார்த்தால் நட்பு கொள்ளத்தோன்றுகிறது. சிலரைப் பார்த்தால் எரிச்சல் (காரணமே இல்லாமல்) வருகிறது. எனக்கு அழகாகத் தோன்றும் பெண் என் நண்பனுக்கு அழகாகத் தோன்றுவதில்லை.யார் கண்களில் கோளாறு? 

ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்றார் புத்தர். ஆனால் அந்த ஆசைக்கே காரணம் இந்த மனம் தானே? 
ஆக,இந்த மனதினை அடக்கி நமது வழிக்குக் கொண்டு வந்து விட்டால் ....எல்லாதுன்பங்களில்இருந்தும்விடுதலை கிடைத்துவிடுமா?அப்படியென்றால் அதற்கு என்ன வழி?

இன்னும் அலசுவோம் ...!