இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், ஜூலை 26, 2012

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை.16 !...ஸ்ரீரங்கம்..5 !..!

நான் பெங்களூருவில் பன்னீர் கட்டா ரோட்டில் இரண்டு வருடங்களும், மாஹடி ரோட்டில் ஒரு வருடமும் ஆக மூன்று வருடங்கள் வேலை செய்தேன்.பிறகு பெங்களூரில் ப்ராஜெக்ட் முடிந்து சென்னைக்கு மாற்றலானேன். சென்னையில் அண்ணாசாலையில் நடைபெற்ற ஒரு பிரபலமான கட்டிடத்தின் கட்டுமானத்திலும் அதன் பிறகு வடபழனியில் இப்போது முடியும் தருவாயில் உள்ள ஒரு கட்டிடத்திலுமாக  இரண்டு வருடங்கள் கழித்தேன்.
இந்தநிலையில் பெங்களூர்- பிடுதியில் ஒரு புதிய ப்ராஜெக்ட் கிடைக்கவே ஏற்கெனவே பெங்களூரில் வேலை செய்த காரணத்தால் என்னை பெங்களூருக்கே அனுப்ப நிர்வாகம்  முடிவு செய்தது.எனவே மீண்டும் பெங்களுர் சென்றேன்.நான் ஏற்கெனவே பெங்களூரில் இருந்ததால் முதலில் எனக்கும் எதுவும் தோன்றவில்லை. ஆனால்  பெங்களூர் பிடுதி site சென்றதும் தான் எனக்கு மண்டை காய ஆரம்பித்தது.!பிடுதியிலிருந்து  கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் உள்ளடங்கி இருந்த அந்த site ஒரு பொட்டல் காடு....! ! பஸ் வசதி,கடைகள் ஆட்டோ என எந்த வசதிகளும் இல்லாத ,இப்போது தான் தொழிற்ச்சாலைகள் கட்ட ஆரம்பித்திருக்கும் ஒரு INDUSTRIAL ஏரியா!நம்ம தமிழ் நாட்டின் சிப்காட் ஏரியா  போல...பிடுதியிலிருந்து எங்களை ஒரு ஜீப்பின் மூலம் காலையில் கொண்டுவந்து விட்டு விடுவார்கள்.பிறகு இரவு ஒன்பது அல்லது பத்து மணிக்கு  தான்  திரும்ப கூட்டிச் செல்வார்கள்! இடைப் பட்ட நேரத்தில் ஜீப் இருக்காது. வேறு போக்குவரத்திற்கு வழியே இல்லாததால்  ஜீப் மற்ற நேரங்களில்  கம்பெனியின்  வேறுவேலைகளுக்காக வெளியே சென்று இருக்கும். எனவே ஜீப் வரும் வரை காத்திருக்க    வேண்டும். பொட்டல்  காடு என்பதால் கம்பனியின் மெஸ் சாப்பாடும் அவ்வளவு சொல்லிக் கொள்ளும் படி இருக்காது.கிட்டத்தட்ட ஒரு ஜெயில் வாழ்க்கை...!இந்த வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த   ஒரே ஆறுதல் நினைத்தபோது ஞாயிற்றுக் கிழமைகளில் மந்த்ராலயம்  சென்று விடுவது தான்.சென்ற முறை இருந்த பெங்களுர் வாழ்க்கைக்கும்  இப்போதைய பெங்களுர் வாழ்க்கைக்கும் நல்ல வேறுபாட்டை உணர்ந்தேன்.  காட்டில் வாழும் வாழ்க்கை போல இருந்ததால் விரைவிலேயே உடல்  கருத்து எடை குறைந்து மனம் சலிப்புற்றேன்.மேலும் இந்த வாழ்க்கையில்  மனம் ஒப்பவில்லை. 

ஒரு முறை சென்னையிலிருந்து உயர் அதிகாரி ஆய்வுக் கூட்டம் நடத்த வந்த போது  எனது நிலைமையை விளக்கி  மீண்டும் சென்னைக்கே மாற்றல் தருமாறு  வேண்டுகோள் வைத்தேன். ஆனால் இது கம்பனியின் கெளரவ பிரச்சினைக்கு உள்ளான  பிராஜெக்ட் எனவும் விரைந்து முடிக்க என்னைப் போன்ற திறமையான  பொறியாளர்கள் அவசியம் தேவை எனவும் இந்த ப்ராஜெக்ட்  முடிந்ததும் பதவி உயர்வுடன் சென்னைக்கு மாறுதல் தருவதாகவும்  உறுதி கூறினார்.(இட மாற்றம் கேட்க்கும் எல்லோருக்கும் கூறும் அதே பதில் தானோ?!)அதற்குக் காரணம் இருந்தது. எனது பிடுதி ப்ரோஜெக்ட்டின்  மேலாளர் என்னை விடுவிக்க சம்மதம் தரவில்லை ப்ரொஜெக்டின் அனைத்து வேலைகளையும் தொழில் நுட்ப்ப ரீதியாக  நான் நன்கு மனதில் பதித்து வேலையினை முடுக்கி விட்டதால்  .நான் சென்று விட்டால்  வேலையின் வேகம் வெகுவாக பாதிக்கும் என அவர்  நினைத்தார். 
என்றாலும் எனது உடல் நிலை ஒத்துழைக்காததால் என்னால் திறம் பட வேலை செய்ய முடியாததை  உணர்ந்தேன்.மேலிடம் எனது வேண்டுகோளை மறுத்ததால்  மீண்டும் வழக்கம் போல ஸ்ரீ ராகவேந்திரரிடம்  முறையிடலானேன்....

இன்னும் வரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக