இந்த வலைப்பதிவில் தேடு

புதன், டிசம்பர் 07, 2011

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை....9 !

             வேலூர் அருகில் உள்ள குடியாத்தம் பகுதியை சேர்ந்த இரண்டு நண்பர்கள் .தீவிர ராகவேந்திர சுவாமி பக்தர்கள். அவர்கள் அவ்வப்போது மந்த்ராலயம் சென்று ஸ்ரீ ராகவேந்திரரை வழி பட்டு வருவார்கள்.

             அவர்கள் எப்போதும்  மந்த்ராலயத்தில்  ஸ்ரீ ராகவேந்திரரை வணங்கிவிட்டு சன்னதியின் முன்பு அமர்ந்து  தியானம் செய்வது  வழக்கம்.(நானும் கூட  மந்த்ராலயம் செல்லும் போது  ஸ்ரீராகவேந்திரர் முன்பு அமர்ந்து ராகவேந்திரரை நினைத்து தியானம் செய்வது உண்டு.) அவ்வாறு அவர்கள் ஒருமுறை தியானம் முடித்து எழும் போது இருவருக்குள்ளும் ஒரே எண்ணம் தோன்றியது. அதாவது ஸ்ரீ ராகவேந்திரரின் மகிமைகளை எல்லோருக்கும் தெரியப் படுத்தும் வண்ணம் ஏதாவது செய்ய வேண்டும்  என்று.இருவரும் ஊரில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார்கள்  அவ்வளவு தான்.  
            
                   மந்த்ராலயத்திலிருந்து வந்த அவர்கள் ஸ்ரீராகவேந்திரரின் மகிமைகளை television சீரியலாக எடுத்து வெளியிட வேண்டும் என்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.   அவர்களே வியக்கும் வண்ணம் நிகழ்ச்சிகள் நடந்தன. சீரியல், சினிமா,ஸ்கிரிப்ட்  என முன் பின் அனுபவங்கள் எதுவும் அவர்களுக்கு  இல்லாமலே ஸ்ரீ ராகவேந்திரரின்  மகிமைகளை உலகிற்குத் தெரியப்  படுத்தும்  வண்ணம் ஒரு நல்ல தொலைக்காட்சித் தொடர் உருவானது.

                ஜெயா தொலைகாட்சி யின் ஜெயா பிளஸ் சானலில்  கிட்டத் தட்ட  50 வாரங்களைக் கடந்து அந்த சீரியல் இன்னமும்   வந்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை காலை  7.30  மணிக்கு அந்த நிகழ்ச்சியை நீங்களும் காணலாம்.
                        சீரியல், சினிமா, ஸ்கிரிப்ட்,T V ஸ்லாட் என முன் அனுபவம் எதுவும் இல்லாத அவர்களுக்கு இப்படி ஒரு எண்ணத்தை உண்டாக்கி அதை செயல் படுத்துமாறும் செய்தது ஸ்ரீ ராகவேந்திரரின் அருள் அன்றி வேறு என்ன?                             
                                                          ------------xx -----------

               வேலூர்-ஆற்காட்டில்  நான் எனது நிறுவனத்திற்காக  அரசாங்க ஒப்பந்த வேலை ஒன்றினை வெற்றிகரமாக செய்து முடித்ததைப் பற்றி எழுதியிருந்தேன். அந்த வேலையினை எங்களது நிறுவனத்திற்காக செய்து கொடுத்தவர்  எங்கள் நிறுவனத்தின்  sub -contrctor ஒருவர். வழக்கமாக எங்கள் நிறுவனம் எடுக்கும் வேலைகளை அவர் தான் ஆட்களை வைத்து முடித்துத் தருவார்.அவரின் பெயர் குப்தா.! பெங்களூரைச் சேர்ந்த அவர்  பின்னாளில் மீண்டும் எனக்கு உதவப் போகிறார் என்று எனக்கு அப்போது தெரியாது......... ! 

அற்புதங்கள் தொடரும்......
                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக