இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், ஜூன் 11, 2012

வெறுப்பின் வெளிப் பாடல்ல...இது ஒரு மந்திரம்!

        " எல்லாம் ஒரு நாள் முடிந்து போகும்" பதிவினைப் படித்துவிட்டு எனது நண்பர் நாராயணன் அமெரிக்கா விலிருந்து எனக்கு எழுதிய இடுகையில் இவை எல்லாம் வாழ்க்கையில் வெறுப்புற்றதன் வெளிப்பாடு என்பதுபோல் எழுதியிருந்தார்.

      எனக்கு என்னவோ அது வெறுப்பின் வெளிப்பாடாகத் தோன்றவில்லை. வாழ்க்கையில் நாம் ஒரு வகையில் பக்குவப் படத் தேவையானது என்றே எண்ணுகிறேன். 

     இது போன்ற தத்துவங்கள் நமது தலைக் கனத்தைப்  போக்கி நம்மை பக்குவப் பட வைக்கும். பல அறிஞர்களும் , ஞானிகளும் பலமுறை சொல்லிவிட்டதைப் போல வாழ்க்கையின் நிலையாமையை நமக்கு நினைவு படுத்தி நம் தலையில் ஒரு கொட்டு வைத்து நம்மை எத்தனை உயரத்தில் இருந்தாலும் கர்வம் கொள்ளாமல் இருக்கவைக்கும்.

     மயான வைராக்கியம் போல மயானத்தில் மட்டும் நம்மை யோசிக்க வைத்து விட்டு அங்கிருந்து வெளியே வந்தவுடன் மனம் மீண்டும் பழைய முருங்கை மரத்திலேயே ஏறிக்  கொள்வது போல் அல்லாமல் நம்மை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்கவே இது போன்ற தத்துவங்களை நாம்  நினைவில் கொள்ளவேண்டும்.

    மற்றவர்கள் துன்பப் படும் படியோ ,வருத்தப் படும் படியோ செயல்களை செய்துவிட்டு  அவர்கள் நம்மை திட்டும் படியோ அல்லது சபிக்கும் படியோ வாழும் வாழ்க்கை நமக்கு  சந்தோஷத்தைத் தருமா? அல்லது மற்றவர்கள்  மகிழ்ச்சியுடன் ,மனநிறைவுடன் வாழும்படியான செயல்களை செய்து அவர்கள் நம்மை வாழ்த்தும்  வண்ணம்  வாழும் வாழ்க்கை நமக்கு சந்தோஷத்தைத்  தருமா? 
     
     நாம் எத்தகைய வாழ்க்கை வாழ   வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நம்மிடமே உள்ளது அல்லவா?

     எப்போதெல்லாம் நம்மில் அகங்காரம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம்    "எல்லாம் ஒரு நாள் முடிந்து போகும்" என்ற மந்திரத்தை நம்முள் சொல்லிக்கொள்வோம்! அகங்காரம் நீங்கி அன்புடன் வாழ்வோம்..!!
 
மீண்டும் சந்திப்போம் .... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக