இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், நவம்பர் 24, 2011

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை....6 !

சில விஷயங்கள் அமானுஷ்யமாக நடக்கும் போது நமக்கு ஆச்சர்யமாக இருக்கும். நான் எப்போதெல்லாம்  ஸ்ரீ ராகவேந்திரரை மனமுருக  நினைக்கிறேனோ அப்போதெல்லாம் எனக்கு அமானுஷ்யமாக , எதிர் பாராமல் ஏதாவது நடக்கும். இதை மற்றவர்களிடம் கூறினால் அவர்களுக்கு அதில் ஒன்றும் ஆச்சர்யமாக இருக்காது. போகிற போக்கில் கேட்டுக் கொண்டு போய்விடுவார்கள்! இது எல்லாம் ஒரு விஷயமா என்பது போல!

2004  மற்றும்  2005 ஆண்டுகளில் நான் வேலை செய்த நிறுவனம் அரசாங்க சம்மந்தமான வேலைகளை ஒப்பந்தம் செய்து , முடித்து  கொடுக்கும் நிறுவனம். ஸ்ரீபெரும் புதூரில் நான்கைந்து சக பொறியாளர்களுடன் வேலை செய்த என்னை பதவி உயர்வு என்ற பெயரில்,  ஆர்க்காடு - வேலூரில் வேலைக்கு  அனுப்ப முடிவு செய்தது.

அங்கு எனக்கு துணையாக , உதவியாக வேறு ஒரு பொறியாளரை  வேலையில்  அமர்த்த எனது தலைமை மறுத்து விட்டது.அப்படியானால் நான் ஒருவனே அனைத்து வேலைகளையும் செய்யவேண்டிய  நிர்பந்தம் ஏற்படும் . 

அதுவும் அது அரசாங்க சம்மந்தமான ஒப்பந்த வேலை என்பதால் அரசாங்கத்தின் பொறியாளர்களின் கீழ் ,அவர்களது ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி வேலை செய்ய வேண்டும்.அதனால் நான் அடிக்கடி அந்த பொறியாளர்களின் அலுவலகம் சென்று அவர்களுடன் ஆலோசனை செய்யவேண்டும். அவர்கள் தான் எங்களது வேலைகளை மேற்பார்வை இட்டு ஒப்புதல் தரவேண்டும்.மேலும் அவர்கள் எங்களது வேலைக்கான பில் களை பாஸ் செய்தால் தான் எங்களுக்கு செய்த வேலைகளுக்கான பணம் வரும்.

எனவே  வேலை நடைபெறும்  இடத்தில் வேலைகளை கவனித்து செய்ய வேண்டியதுடன்  அரசாங்க பொறியாளர்களையும்  சந்தித்து வரவேண்டிய பெரும் பொறுப்பும் என் ஒருவன் மீதே விழும்! மேலும் செய்த  வேலைகளுக்கான பில்களை எழுதி பாஸ் செய்ய வைத்து பணம் வாங்கும் வேலையையும் நான் ஒருவனே செய்ய வேண்டும்!

நான் எவ்வளவு கேட்டபோதும்  இன்னொரு பொறியாளரை தர மறுத்துவிட்டது நிர்வாகம்.  

இந்தநிலையில் நான் வேலூர் சென்று அந்த அரசாங்க அலுவலகத்தில் வேலை செய்வதற்கான ஆர்டர் ஐப் பெற்று வேலையை  ஆரம்பிக்க என்னை வேலூருக்கு மாற்றியது நிர்வாகம். 

மிகவும் படபடப்புடனும் டெண்ஷனுடனும் வேலூருக்கு பஸ்  ஏறிய நான் மனமுருக ஸ்ரீ ராகவேந்திரரை வணங்கினேன். நீதான் என்னுடனே இருந்து இந்த ப்ராஜெக்ட் ஐ  நல்லவித மாக முடித்துத் தரவேண்டும் என வேண்டினேன். 

நான் வேலூரில் உள்ள அந்த அரசாங்க அலுவலகம் செல்ல காந்திநகரில் இறங்கியபோது என்னை வரவேற்றது ஸ்ரீ ராகவேந்திரா பேக்கரி & டீ ஸ்டால் ! பெரிய போர்டில்  ஸ்ரீராகவேந்திரர் காட்சி அளித்துக் கொண்டு புன்னகையுடன் முதன் முதலாக வேலூரில் அடி எடுத்து வைக்கும் என்னை   வரவேற்றார்!!

அற்புதங்கள் தொடரும்...!திங்கள், நவம்பர் 21, 2011

மனம்.....6 !

                     வினோதமான மனம் ! எண்ணிப் பாருங்கள், இந்த மனம் எண்ணுகின்ற எண்ணங்களில், அதன் மூலம் செய்யப் படும் செயல்களில் அதிகம் பாதிக்கப் படுவது மற்றவர்களாகத்தான் இருப்பார்கள் ! தங்களுக்குத் தாங்களே பாதிக்கப் படும் படியாக ஒருவரும் நடந்து கொள்ளமாட்டார்கள்! அப்படி நடந்துகொண்டால் அவர்கள் நிச்சயம் மன நலம் பாதிக்கப் பட்டவர்களாகவோ அல்லது பாதிக்கப் படப் போகிரவர்களாகவோ தான் இருப்பார்கள். ஏன் என்றால் யாரும் தங்களுக்கு பாதிப்பு உண்டாக்கும் எதையும்  நினைக்கவோ செய்யவோ மாட்டார்கள்.!

        ஏன் இம்மாதிரி எண்ணங்கள் மனதில் உண்டாகிறது?   எல்லாம் முற்காலத்தில் நடந்ததையோ  அல்லது யாரோ அவர்கள் மனதில் விதைத்து விட்டதையோ  மனதில் நிரப்பிக் கொண்டு  விட்டதால் ஏற்ப பட்டது.
   
அம்பிகாபதி படம் நேற்று பார்த்தேன். அம்பிகாபதி, அமராவதி  இருவரையும்  பிரிக்க நினைத்து,அமராவதியின் தந்தையான மன்னனும் மற்றவர்களும்  கடவுளின் மீது 100 பாடல்களை சிற்றின்பம்  சேர்க்காமல் அம்பிகாபதி பாடவேண்டும் என நிபந்தனை விதிக்கிறார்கள்.  கடைசியில்  அமராவதியைப் பார்த்த அம்பிகாபதி 99 பாடல்கள் முடிந்த நிலையிலேயே சிற்றின்பப் பாடலை பாடி விட, அம்பிகாபதிக்கு மரண தண்டனை விதிக்கப் படுகிறது.அவனுடன் கூடவே அமராவதியும் இறக்கிறாள்.

இதில் என்ன கண்டுவிட்டார்கள் மன்னனும் மற்றவர்களும் ? ஏன் இந்தக் கொடூர எண்ணம்? இருவரையும் வாழவிட்டு அவர்கள் சந்தோஷமாக வாழ்வதைப் பார்ப்பதில் கிடைக்கும் இன்பம் அவர்களை இறக்க வைத்து
பார்த்ததில் கிடைத்திருக்குமா?
  
லைலா,,மஜ்னு காதலும் ,சலீம் அனார்கலி காதலும்  கூட இப்படித்தான். மற்றவர்களை துன்பப் படுத்தி காணும் இன்பம் என்ன ஒரு கொடூரமான இன்பம்? ஏன் இவை எல்லாம்? 

இன்று இக் கதைகளைக் கேட்கும் யாரும்" பாவம்  இருவரையும் இணைத்து வைத்திருக்கலாம்" என்றே கூறுவார்கள்! ஆனால் யாரும் தங்கள் வீட்டில் இப்படி ஒரு காதல் கதை உண்டானால் ஏற்க மாட்டார்கள்! ஏன்? மனதில் நிரப்பிக் கொண்ட குப்பை எண்ணங்களே காரணம்!

வாழ்க்கையை ஒரு ஏரியல் பார்வையில் பார்க்கக் கற்றுக்  கொள்ளுங்கள்.
ஒரு ஏரோ பிலேனிளிருந்து கீழே பார்த்தால் எப்படி இருக்கும்? அதே போல நமது வாழ்க்கையில் நடந்ததையும்  மற்றவர் வாழ்க்கையில் நடந்ததையும்  பாருங்கள் !உங்களுக்கே சில நடந்தவை களையும் உங்கள் நடத்தைகளையும் ,  எண்ணங்களையும் பார்க்கும் போது சிரிப்பாகவும் வெட்கமாகவும்,வருத்தமாகவும் ஏன் தான் இப்படி நடந்து கொண்டோமோ என்றும் இருக்கும்! 

மனதில் நிரப்பிக் கொண்டதை கீழே கொட்டுங்கள்.மனதை காலியான கோப்பை ஆக்குங்கள். சிறிது  காலம் கழித்து அந்தக் கோப்பையையும் உடைத்து எறியுங்கள் ! 

மனதை மாற்றுங்கள்..நீங்களும் மகிழ்ச்சியாய் இருங்கள் .மற்றவர்களையும்  மகிழ்ச்சியாய் வைத்திருங்கள்.
 இன்பம் பொங்கும்....என்றும் தங்கும்......!

இன்னும் அலசுவேன் !

செவ்வாய், நவம்பர் 15, 2011

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை.....5 !


மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீதரன்- கங்கா என்று ஒரு தம்பதியர். ஸ்ரீதரன் வங்கி ஒன்றில் அதிகாரியாக இருந்தபோது இதய நோய்க்காக "பைபாஸ்' செய்து கொண்டவர். இவர்களின் பிள்ளைகள் அமெரிக்காவில் பணிபுரிகிறார் கள். ஸ்ரீதரன்- கங்கா தம்பதியரும் ஸ்ரீராகவேந்திர பக்தர்கள். ஒரு சமயம் ஸ்ரீதரனை வீட்டிலேயே விட்டுவிட்டு கங்காவும் அவருடைய உடன் பிறந்த அண்ணன், தம்பி, அக்காள் என அனைவரும் திருவள்ளூருக்கு அருகிலுள்ள இறைமங்கலம் எனும் கிராமத்திலிருக்கும் ஸ்ரீராக வேந்திர மடத்திற்குச் சென்றுள்ளனர். பூஜை, புனஸ்காரம், அன்னதானம் முடிந்தபோது திருமதி கங்காவிற்கு ஓர் அதிர்ச்சிகரமான தொலைபேசி செய்தி வந்தது.

"வீட்டில் தனியாக இருந்த ஸ்ரீதரன் திடீரென மயங்கி விழுந்து, உடல் நலம் குன்றி ஆபத்தான நிலையில் இருக்கிறார். ப்ளாட்டில் இருந்தவர்கள் சென்னையின் புகழ் பெற்ற ஒரு மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறார்கள். உடனே மருத்துவமனைக்கு வரவும்.' -இப்படி செய்தி வந்தவுடன் திருமதி கங்காவும் உறவினர்களும் அலறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடிவர, ஆபத்தான செய்தியை மருத்துவர்கள் தெரிவித்தனர். மூளை சிறிது சிறிதாக செயலிழக்கத் துவங்கிவிட்டதாகவும், உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டுமெனவும் டாக்டர் கள் கூற, எப்படியாவது பிழைத்தால் போதும் என உறவினர்கள் சொல்லிவிட்டனர். மூளை ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தும், சில மணி நேரங்களில் "கோமா' நிலையை அடைந்து விட்டார் ஸ்ரீதரன். எவ்வளவோ முயற்சித்தும் பயனில்லாமல் போய்விட்டது. மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர். டெல்லியிலிருந்து கோவை வரை உள்ள உறவினர்கள் அனைவரும் வந்துவிட்டார்கள். இன்னும் சில மணி நேரங்களிலோ ஓரிரு நாளிலோ ஸ்ரீதரனின் கதை முடிந்துவிடும் நிலை. அப்போதுதான் ஸ்ரீராகவேந்திரரின் அருட்கடாட்சம் கிடைத்தது.


நள்ளிரவில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு முதியவர் நுழைகிறார். இந்த அகால நேரத்தில் ஒரு முதியவர் நுழைவ தைக் கண்ட இரவுப் பணி மருத்துவர்கள் சிலர் தூரத்திலிருந்து ஓடி வருகிறார்கள். அவர்கள் வந்து ஐ.சி.யூ.வின் கதவைத் திறந்து பார்த்தபோது அந்த முதியவரைக் காணவில்லை. ஆனால் கோமா நிலையிலிருந்த ஸ்ரீதரன் எழுந்து உட்கார்ந்திருந்தார். மருத்துவர்கள் வியப்புற்று ஸ்ரீதரனை என்ன நிகழ்ந்தது என்று கேட்க, தன் காதருகே "ஸ்ரீதரா... உனக்கு ஒன்றுமில்லை; எழுந்து உட்கார்' என்று மூன்று முறை யாரோ சொன்னதாகவும்; எழுந்து உட்கார்ந்தபோது வேகமாக ஒரு பெரியவர் வெளியே போனதைப் பார்த்ததாகவும் சொன்னார்.


யார் அந்தப் பெரியவர்? ஸ்ரீதரன்- கங்கா தம்பதியர் வந்தவர் ஸ்ரீராகவேந்திரரே என்று பக்தியுடன் சொல்கிறார்கள். உண்மை... இது சத்தியம்! எண்ணற்ற பக்தர்களின் குறையை நீக்க கல்ப விருக்ஷமாய்- காமதேனுவாய் இருந்து, அதர்மங்கள் பெருகும் இக்கலியுகத்தில் ஸ்ரீராகவேந்திரர் அருள்புரிகிறார் என்பது நிஜம். நாமும் அவரை மனதாரத் துதிப் போமாக!


"பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாய ச
பஜதாம் கல்ப வ்ருக்ஷாய நமதாம் காமதேனவே!'

உண்மைச் சம்பவங்கள்

                          கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகங்களில் நிகழும் அதர்ம காரியங்களை வேரறுப்பதற்காக எம்பெருமான் நாராயணன் ஒவ்வொரு யுகங்களிலும் சில அவதாரங்கள் எடுக்க விரும்பினார். இதை அறிந்த பிரம்ம தேவன், ஸ்ரீமன் நாராயணன் எடுக்கப் போகும் பத்து அவதாரங்கள் என்னவென்று அறிந்து, அந்த அவதாரங்களை மனதில் நினைத்துப் பூஜை செய்ய விரும்பினார். ஆனால் அப்படிப் பூஜை செய்வதற்கான நறுமணமுள்ள மலர்கள் சத்திய லோகத்தில் கிடைப்பது அரிது என்பதால், தன்னுடைய தேவதைகளில் ஒருவரான சங்குகர்ணன் என்பவரை பூலோகத்திற்கு அனுப்பி மல்லிகை, ரோஜா, செம்பருத்தி, பாரிஜாதம், பவளமல்லி, தாழம்பூ போன்ற மலர்களை தினமும் எடுத்து வரப் பணித்தார். சங்குகர்ணனும் தினமும் பூமிக்கு வந்து மலர்களைப் பறித்துச் சென்று பிரம்மா விடம் கொடுத்தார். ஒவ்வொரு யுகத்திலும் நாராயணன் எடுக்கவிருக்கும் மூர்த்தங்களுக்கு ஏற்ப பூஜை செய்து வந்தார் பிரம்மா.

அன்று...


திரேதா யுகத்தில் எடுக்கப்போகும் ஸ்ரீ ராமாவதாரத்திற்கான பூஜை ஆரம்பமானது. ஒவ்வொரு மலராக சங்குகர்ணன் எடுத்து பிரம்மாவிடம் கொடுக்க, பிரம்மா அர்ச்சனை செய்தார். திடீரென்று சங்குகர்ணனிடமிருந்து மலர் வராததைக் கண்ட பிரம்மதேவன் திரும்பிப் பார்த்தார். ஸ்ரீராமனுடைய அழகிலும் கம்பீரத் திலும் தர்மத்திலும் தன் மனதைப் பறிகொடுத்த சங்குகர்ணன் மலர் கொடுப்பதை மறந்து மயங்கி நின்று கொண்டிருந்தார். மலர் தராததால் கோபம் கொண்ட பிரம்மா, ""பூமியில் நீ பிறந்து, எந்த ராமனுடைய பெருமையில் மயங்கினாயோ- அவருடைய அவதாரப் பெருமையை மக்களுக்கு உபதேசித்து மீண்டும் சத்திய லோகத்திற்கு வருவாயாக!'' என்று சபித்தார்.


சங்குகர்ணன் திடுக்கிட்டார். ஆனாலும் பிரம்மனின் சாபமாயிற்றே? அதனால் கிருத யுகத்தில் பிரகலாதனாகப் பிறந்து நரசிம்ம அவதாரத்தையும்; திரேதா யுகத்தில் ஸ்ரீராமனையும் கண்டார். பின்னர் துவாபர யுகத்தில் பாஹ்லீகன் என்கிற அரசனாகப் பிறந்து கிருஷ்ண சேவை செய்து, கடைசியில் இந்தக் கலியுகத்தில் ஸ்ரீகிருஷ்ண தேவராயரின் குலகுருவான ஸ்ரீ வியாசராஜராகவும், பின்னர் ஸ்ரீராகவேந்திரராகவும் அவதரித்து, பூமியில் பல புண்ணிய காரியங்களைச் செய்து, மக்களை அருள் மார்க்கத்தில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்.


ஒருசமயம் ஸ்ரீராகவேந்திரர் தங்கியிருந்த இடத்திற்கு வந்த மூன்று பிரபலமான மலையாள ஜோதிடர்கள், அவருடைய ஜாதகத்தை வாங்கி அவருடைய ஆயுள் பாவத்தைக் குறித்துத் தந்தனர். ஒரு ஜோதிடர் சுவாமிகளுடைய ஆயுள் எழுபது ஆண்டுகள் எனவும்; இரண்டாமவர் முந்நூறு ஆண்டுகள் எனவும்; மூன்றாவது ஜோதிடர் எழுநூறு ஆண்டுகள் எனவும் சொல்ல, கூடியிருந்த மக்கள் ஜோதிடர்களைக் கேலி செய்தார்கள்.


""ஒரு மனிதர் முந்நூறு ஆண்டுகளும் எழுநூறு ஆண்டுகளும் உயிர் வாழ முடியுமா?'' என்று அவர்கள் கேட்க, சுவாமிகள் அனைவரையும் அமைதியாக இருக்கச் சொல்லி, மூவரும் சரியாகக் கணித்திருக்கிறார்கள் என்று கூறி, அதற்கு விளக்கமும் அளித்தார்.


அதாவது, தன்னுடைய உடல் இந்த மண்ணில் எழுபது ஆண்டுகள் இருக்கும் என்றும்; ஜீவசமாதி அடைந்து முந்நூறு ஆண்டுகள் பிருந்தாவனத்தில் இருக்கப் போவதாகவும்; தன்னை உள்ளன்போடு நேசிக்கும் மக்களோடு தான் எழுநூறு ஆண்டுகள் இருக்கப் போவதாகவும்; முடிவாக பிரம்ம லோகம் சென்று சங்குகர்ணனாக இருக்கப் போவதாகவும் தெரிவித்தார்.


1601-ஆம் ஆண்டு, தமிழகத்தில் கடலூர் மாவட்டத்திலுள்ள புவனகிரியில் அவதரித்த சுவாமிகள், 1671-ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசம் மந்த்ராலயத்தில் பிருந்தாவனப் பிரவேசம் செய்தார். பின்னர் முந்நூறு ஆண்டுகள் -அதாவது 1971-ஆம் ஆண்டு வரை பிருந்தாவனத்தில் இருந்தவாறே தன் பக்தர் களுக்கு அருள்புரிந்தார். பின்னர் 2671-ஆம் ஆண்டு வரை தன் பக்தர்களுக்காக நேரிலேயே வந்து அருள்புரிவார் என்பது ஐதீகம். இதை ஸ்ரீ ராகவேந்திரர் பலமுறை தன் பக்தர்களுக்கு உணர்த்தியிருக்கிறார். எண்ணற்ற பக்தர்கள் ஸ்ரீ சுவாமிகள் மூலமாகப் பயனடைந்ததைத் தெரிவிக்கின்றனர். அவற்றில் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.


சென்னை திருவல்லிக்கேணியில் ஸ்ரீனிவாஸ்- சரஸ்வதி என்னும் தம்பதியர் ஸ்ரீராகவேந்திரரின் தீவிர பக்தர்கள். நான்கு ஆண் பிள்ளைகளுக்குப் பிறகு ஐந்தாவதாக ஒரு பெண். செல்லமாய் வளர்ந்த அப்பெண்ணுக்கு பத்து வயது நிரம்பியபோது, பள்ளியிலிருந்து வந்த அவள் காய்ச்சலால் சுருண்டு படுத்து விட்டாள். மருத் துவரிடம் காட்டியும் காய்ச்சல் குணமாக வில்லை. காய்ச்சல் 104 டிகிரி வரை தீவிர மடைந்தது. டைபாய்டு என்று கண்டுபிடித்து மருந்து கொடுக்கத் தொடங்கினார்கள். இரண்டு மூன்று வாரங்கள் சென்றும் நோய் குணமாகவில்லை. மருத்துவமனையில் சேருங்கள் என்று மருத்துவர் சொல்லிவிட்டார். ஆனால் அந்தப் பெண் அன்றிரவு கிட்டத்தட்ட "கோமா' நிலையை அடைந்த போது, இனி செய்வதற்கு எதுவுமில்லை என்று மருத்துவர் கைவிரித்து விட்டார். ""இனி உங்கள் பெண்ணை அந்த ராகவேந்திரர்தான் காப்பாற்ற வேண்டும். நாளைய பொழுது உங்களுக்கு நல்லபடியாக விடிய நானும் இறைவனை வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லை'' என்று சொல்லிவிட்டார் மருத்துவர். என்ன செய்வது? ஸ்ரீனிவாஸ்- சரஸ்வதி தம்பதியரும், வீட்டிலிருந்த பிள்ளைகளும் ஸ்ரீராகவேந்திரர் படத்தின்முன் அமர்ந்து அழுதுகொண்டே பிரார்த்தித்தனர். நள்ளிரவு தாண்டியது. அனைவரும் துக்கமாக- அதே சமயத்தில் தூக்க மயமாகவும் இருந்த நேரத்தில் அந்த அற்புதம் நிகழ்ந்தது.


கிட்டத்தட்ட கோமா நிலையில் படுத்திருந்த அந்தப் பெண்ணின் தலையருகே, ஜெகஜ்ஜோதி யாய் ஒரு பெரியவர் நின்று கொண்டு அவளின் தலையைத் தொடுகிற மாதிரி ஓர் உணர்வை அந்த ஹாலில் இருந்த அனைவரும் உணர்ந்தனர். சட்டென்று கண்விழித்து எல்லா விளக்குகளை யும் போட்டபோது அவரைக் காணவில்லை. அதே நேரத்தில் அந்தப் பெண்ணின் உடல் வியர்வையில் நனைந்திருந்தது. மெதுவாகக் கண்விழித்தாள் அவள். தர்மாமீட்டரில் பார்த்தபோது உடலின் வெப்பம் 98.4 டிகிரி இருந்தது. "குடிக்க ஏதாவது கொடுங்கள்' என்று சைகை செய்தாள். கொடுத்தார்கள். மறுநாள் வந்து பார்த்த மருத்துவர் வியந்தார். இன்று அவள் பெண்ணல்ல; பெண்மணி. கிட்டத்தட்ட ஐம்பது வயதாகும் அந்த அம்மையாருக்கு ஒரு பெண்ணும் பையனும். பெண் மருத்துவராகவும் பையன் நிர்வாக அதிகாரியாகவும் இருக்கிறார் கள். கணவர் தொழிலதிபர். அவர் பெயர் ராக வேந்திரன்!


                                                                          நன்றி:www .sivaraghavendra .com  
அற்புதங்கள் தொடரும்....!

திங்கள், நவம்பர் 14, 2011

மனம்.......5 !

                  சென்ற அத்தியாயத்தில் சொன்னவாறு  பெற்றோருக்கு மட்டும் தான் தங்கள் பிள்ளைகளை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறதா? இல்லை.பிள்ளைகளுக்கும் அதே போலத்தான். தங்கள் தாய்  தந்தையரை மகிழ்ச்சியுடன் வைத்திருக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அவர்களுக்கும் உள்ளது. பிறர்  என்னசொல்லுவார்களோ என்று நினைத்து அவர்களின் மகிழ்ச்சிக்கு தடை போடும் பிள்ளைகளை நான் பார்த்திருக்கிறேன் . ஏன் இதெல்லாம் வருகிறது.?மற்றவர்கள் சொல்வதை எல்லாம்  மனதில் போட்டு நிரப்பிக் கொண்டு அதில் இருந்து  மீள முடியாமல் போவதால் வருவது இது.

     எனக்குத்தெரிந்து ஒரு 50 வயது நிரம்பியவர் தனது பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் மணம் செய்து கொடுத்து விட்டார்.மனைவியை இழந்த அவர்  தனி ஆளாக நின்று பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து திருமணமும் செய்து கொடுத்து விட்டார். இப்போது அவர் தனிமையில்.அவர் பிள்ளைகளோ அமரிக்காவிலும் பாம்பே யிலும்  செட்டிலாகிவிட்டார்கள்.இந்த வயதில்  அவருக்கு விவாகரத்து ஆனஒரு பெண்மணியிடம் அன்பு உண்டாக இருவரும் வாழ்க்கையில் இணைய முடிவு எடுத்த போது அவர்களின் பிள்ளைகள் அவரை படுத்தி எடுத்து விட்டனர். இந்த வயதில் உனக்கு இது தேவையா?எங்கள் மாமனார் வீட்டில் என்ன நினைப்பார்கள்.?உறவினர்கள் என்ன நினைப்பார்கள்? ஊரார் என்ன நினைப்பார்கள்? அப்படி இப்படி என அவரை ஒரு வழி பண்ணிவிட்டார்கள். 
        தங்களால் தங்கள் அப்பாவை அடிக்கடி வந்து பார்க்கமுடியாது அப்பாவுக்கு இனி அருகில் யாரும் இல்லை என்பதை நினைத்துக் கூட பார்ககமுடிய வில்லை அவர்களால். அவர்களுக்கு தங்கள் தந்தை தனது இறுதிக் காலத்தில் எப்படி இருப்பார் என்ற கவலை துளியும் இல்லை. அவர்களுக்கு வேண்டியது எல்லாம் வெளி உலகின் பார்வை பற்றித்தான்.   
              ஏன் என்றால் மற்றவர்கள் சொல்வதை எல்லாம் தங்கள் மனதில் அவர்கள் ஏற்றிக் கொண்டு விட்டார்கள்.அவர்களுக்கு அதில் இருந்து  மீண்டு வந்து எதார்த்தத்தை பார்க்கும் மனது இல்லை. அதனால் அவர்களுக்கு  தனது தந்தையின் எதிர் காலத்தைப் பற்றி யோசிக்கும் மனநிலை  உண்டாகவில்லை. தங்களது தந்தைக்கு எது நல்லதோ,எது மகிழ்ச்சியோ அதை ஆதரிக்க அவர்களுக்கு மனது ஒப்பவில்லை.
                                     ஒருவர் வயதான காலத்தில் வேறு ஒரு துணை யை நாடுவது தவறு என்றும் வயதான பிள்ளைகள் இருக்க வேறு திருமணம் செய்யக் கூடாது என்றும் வெளி உலகம் கூறிக் கொண்டிருப்பதை தங்கள் மனதில் ஏற்றிக் கொண்டு விட்டார்கள்.இப்போது அதை மீறுவதை பெரிய கவுரவக் குறைச்சலாக ஒரு போலியான எண்ணத்தை மனதில் ஏற்றிக் கொண்டு விட்டார்கள்! 
                     அவர்கள் ஏன் தங்கள் மனதை இவ்வாறு கட்டிப் போட்டுக் கொண்டு விட்டார்கள்? அவர்கள் வாழ்க்கையில் நன்கு செட்டில் ஆனபின் இப்போது தங்கள் தந்தை யின்  எதிர் காலத்தையும் அவரின் மகிழ்ச்சியையும்  ஏன் கவனத்தில் கொள்ளமுடியவில்லை.? மனம் தான் காரணம்!
               
  போலியான மனக் கட்டுப் பாட்டிலிருந்து வெளியே வாருங்கள்! மற்றவர்களின் மகிழ்ச்சியையும் பாருங்கள் . அவர்களுக்கு வேண்டியதை செய்யுங்கள்.அவர்களின் மகிழ்ச்சியை நீங்களும் பாருங்கள்.அவர்களுடன் அந்த மகிழ்ச்சியை கொண்டாடுங்கள்! அதுதான் வாழ்க்கை !
             
எல்லோரும் மகிழ்ச்சியுடன் வாழத்தானே வாழ்க்கை?
           
மனதை மாற்றுங்கள் ...மகிழ்ச்சி பொங்கும்...இன்பம் தங்கும்...!

இன்னும் அலசுவேன்.....!

ஞாயிறு, நவம்பர் 06, 2011

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை.....4 !

                   லாரன்ஸ் என்றொரு நடனக் கலைஞர் சினிமாவில் எப்படியாவது நுழைந்து பெரிய ஆளாக வரவேண்டும் என்று மிகவும் ஆவலாக இருந்தார்.அவ்வப்போது சினிமாவிலும் நடனக் குழுவில் தோன்றியும்,ஒருசில படங்களில்  நடனமாடியும் வந்தார்.
              அவரின் சிறு வயதில்  மிகவும் உடம்பு  முடியாமல்  போய்விட்டது. மூளையில் கட்டி இருப்பதாக டாக்டர்கள் கூற  அவரது தாய்க்கு  இனி அவரது  வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற கவலை  உண்டானது.
                                அப்போது அவரது தாய்க்கு   மகான் ஸ்ரீ ராகவேந்திரர் பற்றியும் அவரின் கருணை உள்ளம் பற்றியும்   தெரிய வந்தது.அன்று முதல்  தினமும் ஆழ்ந்த பக்தியுடன் அவரை வணங்கி, லாரன்ஸ்  குணமாக    பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார். 
                             
                                       என்ன ஆச்சர்யம்!டாக்டர்களே வியக்கும் வண்ணம் அவர் விரைவிலேயே குணம் ஆனதுடன் நடக்கவும் ஆரம்பித்தார் ! பிறகு  நடனத்தில் தன் கவனத்தை செலுத்தி அற்புதமாக நடனம் ஆடவும் ஆரம்பித்தார். ஒரு நாள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கண்களில்  அவர் மாட்ட ,அவர் லாரன்ஸ் நடனத்தைப் பார்த்து வியந்து சினிமாவில் பரிந்துரைத்தார்.

                         மிகவிரைவிலேயே  சினிமாத்துறையில்  சிறந்த நடன அமைப்பாளராக தன் முத்திரையை பதித்து,தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தார். நடனத்தில் மட்டுமல்ல இன்று அவர் ஒரு வெற்றிகரமான நடிகராகவும்,கதை  ஆசிரியராகவும், வெற்றிப்பட இயக்குனராகவும் தமிழ் படவுலகம் மட்டுமல்லாமல் தெலுங்குப் படவுலகிலும் கொடிகட்டிப் பறக்கிறார்.!

                ஸ்ரீ ராகவேந்திரர் அவரை நடக்கவும் நடனமாடவும் வைத்ததுடன் தனது பக்தன் ரஜினி மூலமாகவே அவருக்கு சினிமா உலகிலும் ஏற்றம் தந்ததை என்னவென்று சொல்ல?
        
                                ஸ்ரீ  ராகவேந்திரர் அருள் பெற்ற அவர் தனது பெயரை ராகவேந்திரா லாரன்ஸ் என்று மாற்றிக் கொண்டதையும் ,ஸ்ரீ ராகவேந்திரருக்கு சென்னையில்  தனது பெரும் முயற்சியிலேயே ஒரு கோவிலையும் கட்டி இருக்கிறார் என்பதனையும் உங்களுக்கு கூறவும் வேண்டுமோ? ! !
  

அருள் பார்வை தொடரும்....!

செவ்வாய், நவம்பர் 01, 2011

மனம் ...4 !

                   சமீபத்தில் ஒரு செய்தி.ஒரு பெண்ணின் தந்தை நல்ல வேலையில் இருப்பவர்.தனது மகள் தனது ஜாதி அல்லாத வேறு ஜாதியைச் சேர்ந்த பையனை திருமணம் செய்ததால் ஆட்களை வைத்து அவரே தனது மருமகனை கொலை செய்து விட்டார். ஏன் என்றால் உலகம் அவரை கேலி செய்யுமாம்.அவரது மானம் மரியாதை எல்லாம் போய் விட்டதாம்.இத்தனைக்கும் பையனும் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த, நல்ல வேலையில் உள்ள பையன் தான்.ஆனால் ஊர் உலகம் என பயந்து மனம் பேதலித்து விட்டார். இப்போது அவர் மகள் கைம்பெண்,அவர் சிறையில் கொலை காரன் என்ற பட்டத்துடன்,அவர் மனைவி துணை இல்லாமல் தனியாக,பையனின் உறவுகளோ பையனை இழந்த சோகத்தில்.இவ்வளவும் ஏன்?ஊர் உலகத்திற்கு பயந்து தான்.!இப்போது ஊர் உலகத்திற்கு என்ன? அவரவர் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்விடுவார்கள்.யாருக்கு நஷ்டம்?


                   ஒரு உண்மையான தந்தை எப்படி இருக்க வேண்டும்? மகளுக்கு எது பிடிக்கிறதோ அதை செய்து தரவேண்டும்.தவறான முடிவுகளை எடுத்துச் சொல்லி  புரியவைக்கவேண்டும். நல்லமுடிவுகளை ஆதரிக்க வேண்டும்.இம்மாதிரி காதல் விஷயங்கள் கொஞ்சம் sensitive ஆன பிரச்சினைகள். அதனை நன்கு ஆராய்ந்து  ஒரு முடிவிற்கு வரவேண்டும். நல்ல பையன் நல்ல இடம் என்றிருந்தால் ஜாதி மதம் பார்க்காமல் முன்னின்று எடுத்து  செயல் படுத்த வேண்டும். மகளுக்கோ மகனுக்கோ மிகவும் பிடித்துப் போய் விட்டது என்றால் ,அவன்/அவள் கிடைக்கவில்லை என்றால் தான் உயிருடன் இருக்க மாட்டேன் என்று சொல்லும் அளவிற்குப் போய் விட்டால்,மகன்/மகள் வாழ்க்கையையே முதலாவதாகக் கொள்ளவேண்டும்.ஊர் உலகம் மானம் மரியாதை போன்ற தேவை இல்லாத வாதங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு மகன்/மகளின் மகிழ்ச்சியே குறிக்கோளாகக் கொண்டு அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.  அது மட்டுமல்லாமல் பின்னாட்களில் பிரச்சினைகள் வந்தால் நீதானே ஆசைப்பட்டா ய் என்னிடம் ஏன் வருகிறாய் என்று கூறாமல் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.அதுதான் உண்மையான அன்பு, பாசம்!இது மாதிரியான சமயங்களில் மற்றவர் சொல்லுக்கு மனதை அலையவிடாமல் நாம் நமது மகிழ்ச்சி ஒன்றையே பார்க்க வேண்டும். நமக்கு நமது மகிழ்ச்சிதானே முக்கியம்? உலகில் யாரும் கவலையுடனோ துக்கத்துடனோ வாழ விரும்புவதில்லை.ஆக,வெளிஉலகம் சொல்வதைக் கேட்கக் கூடாது-துன்பமும் சோகமும் வரும் என்றால்..வெளிஉலகம் சொல்வதைக் கேளுங்கள் உங்களுக்கு சந்தோஷமும், நிம்மதியும்,இன்பமும் கிடைக்குமென்றால்....!

  இன்னும் அலசுவோம்....!