இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, ஜூன் 01, 2012

பெண்கள்...!

 மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள்.உண்மையிலேயே ஒரு நல்ல அன்பான குணவதியான அழகான பெண் மனைவியாக கிடைத்தால் அதைவிட வேறு என்ன வேண்டும் வாழ்க்கையில்? ஒரு நல்ல பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி கவியரசர் கண்ண தாசன் என்ன சொல்கிறார் ? பார்ப்போமா?

‘தாயைப் பார்த்துப்பெண்ணெடு
தரத்தைப்பார்த்து வரவிடு
நிலத்தைப் பார்த்து பயிரிடு
நேரம் பார்த்து முடிவெடு’
- என்பார்கள்.

“தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால்,
மளைப் படிக்கட்டில் பார்க்க வேண்டாம்” என்பார்கள்.

“தாயைப் போலபிள்ளை நூலைப்போல சேலை” என்பார்கள்.

தாயின் குணங்கள் பெண்ணுக்கும், தந்தையின் குணங்கள் பிள்ளைக்கும் படிவதாக ஐதீகம்.

அப்படிப் படியாமலும் போவதுண்டு; அது விதி விலக்கு.

ஆகவே, தாயைப் பற்றித் தெரிந்து கொண்டால்,பெண்ணைப்பார்க்க வேண்டியதில்லை.

இளைஞரின் துடிதுடிப்பு தாயைப்பற்றிக் கேள்வி கேட்பதில்லை. பெண்ணின் வாலிப்பான அங்கங்களே அவன்நினைவை மயக்குகின்றன.

அதனால்தான் ‘பெற்றோர் பார்த்து மகனுக்குப்பெண் தேட வேண்டும்’ என்கிறார்கள்.

பெற்றவர்கள் பெண் பார்க்கும்போது, பெண்ணின் குலம் கோத்திரம் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்தபிறகுதான், பேசி முடிக்கிறார்கள்.

அத்தகைய திருமணங்ள் - நிதானமாக அறிந்து முடிக்கப்ட்ட திருமணங்கள். நூற்றுக்குத்தொண்ணூறு வெற்றிகரமாக அமைந்திருக்கின்றன.

ஆத்திரத்தில் காதல்
அவசரத்தில் கல்யாணம்
-என்று முடிந்த திருமணங்கள். நூற்றுக்குத் தொண்ணூறு தோல்வியே அடைந்திருக்கின்றன.

ஆகவே, ஆயுள்காலக் குடும்ப வாழ்க்கைக்கு நிம்மதி வேண்டுமென்றால், பெணகள் தேடும் பொறுப்பை பெற்றோர்களிடமே விட்டுவிட வேண்டும்.

காவியத்துக்குச் சுவையான காதல் வாழ்க்கை, பல பேருக்கு நேர்மாறான பலனையே தந்திருக்கின்றது. (விதி விலக்குகளை இதில் நான் சேர்க்கவில்லை)

குடிப்பிறப்புப் பார்த்துதான பெண்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை மழுவதும் அமைதி இழந்து, அவமானம் சுமந்து, அழுது நொந்து சாக வேண்டியிருக்கும்.

‘குடிப்பிறப்பு’ என்பது ஜாதியைக் குறிப்பதல்ல; பெண் பிறந்த குடும்பத்தையே குறிப்பது.

எந்த ஜாதியிலும் நல்லபெண்கள் தோன்றுகிறார்கள்; கெட்ட பெண்களும் இருக்கிறார்கள்.

நல்ல பெண்களைத் தேர்ந்தெடுப்பதில் ஜாதி- மதம் -பார்ப்பது பயன்ற்றது.

குடிப்பிறப்புத்தான் இன்றியமையாத்து.

இலங்கையில் சீதையைக் கண்டு திரும்பிய அநுமன், இராமனிடம் இப்படிச் சொல்கிறான்.

“விற்பெரும் தடந்தோள் வீர
வீங்குநீர் இலங்கை வெற்பின்
நற்பெரும் தவத்த ளாய
நங்கையைக் கொண்டே னில்லை;
இற்பிறப் பென்ப தொன்றும்
இரும்பொறை என்ப தொன்றும்
கற்பெனும் பெயர தொன்றும்
களிநடம் புரியக் கண்டேன்!”

“ஆரியப் புத்ரா! நான் இலங்கையின் சீதை என்னும் நங்கையைக் காணவில்லை.

“குடிப்பிறப்பு என்ற ஒற்றுமையும், சிறந்த பொறுமை எனும் ஒன்றையும், கற்பு எனும் ஒன்றையும் கண்டேன்” என்கிறான்.

“நலத்தின் கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப்படும்”

என்றான் வள்ளுவன்.

“நடத்தையின் குற்றம் குலத்தின் குற்றமே” என்பது வள்ளுவன் வாதம்.

ஆகவே, ஒரு பெண்ணின் குடிப்பிறப்பைக்கூர்ந்து அறிதல் இன்றியமையாத்து.

நற்குடிப் பிறப்பை அறிந்துகொண்டு விட்டால், பிறகு பெண்ணின் உருவத்தை மட்டும் பார்த்தால்போதும் மற்ற குணங்கள் தாய் வழியே வந்திருக்கும்.

பொறுப்பற்ற இளைஞன், குடும்ப몮பொறுப்பை மேற்கொண்ட பிறகு, அந்த ரதம் நீண்ட தூரம் செல்ல வேண்டிய ரதம் என்பதை அறிந்தால், இதில் எச்சரிக்கையாக இருப்பான்.

நல்ல துணை கிடைக்காமல், பைத்தியக்கார்ரைப் போல் உலவும் துர்பாக்கியசாலிகளின் கண்ணீரில் இருந்து, பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் பாடத்தை இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

“பத்தாவுக்கேற்ற பதிவிரதை யாமானால்
எத்தாலும் கூடி வாழலாம் - சற்றேனும்
ஏறுமாறாக இருப்பாளே யாமாயின்
கூறாமற் சந்தியாசம் கொள்!”

“சண்டாளி சூர்ப்பநகை தாடகையைப்போல்வடிவு
கொண்டாளைப்பெண்ணென்று கொண்டாயே தொண்டா
செருப்படித்தான் உந்தன் செல்வமென்ன செல்வம்
நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்!”

-என்றான் தமிழ் மூதாட்டி.

“கைப்பிடி நாயகன் தூங்கையிலே அவன் கையை
எடுத்(து)
அப்புறம் தன்னில் அசையாமல் முன்வந்(து)
அயல்வளைவில்
ஒப்புடன் சென்று துயில்நீத்துப் பின்வந்(து)
உறங்குவாளை
எப்படி நான் நம்புவேன், இறைவா
கச்சி ஏகம்பனே!”

என்று புலம்பினார் பட்டினத்தார்.

சித்தர்கள், ரிஷிகள், சந்நியாசிகள் பலர் மனைவியால் விரக்தியுற்ற அப்படி ஆனவர்கள் என்பதால்தான் ந்தி மூலம் ரிஷிமூலம் பார்க்கக்கூடாது என்கிறார்கள்.

“இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை
இல்லாளும் இல்லாறே ஆமாயின் -இல்லால்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்”

இதுவும் மூத்தோர் மொழி.

இல்லாள் என்பவள் இல்லத்தை ஆள்பவள்; அவள் அன்பில்லாளாக, அடக்கமிலாளாக பணமில்லாளாக, பத்தினித்தன்மை இல்லாளாக இருந்துவிட்டால், உன் வீடு புலி கிடந்த குகைபோல் ஆகிவிடும்” என்பது முன்னோரு எச்சரிக்கை!

இந்துப் புராணங்களில் ஈடுபாடு கொண்டவர்கள்,நல்ல மனைவியின் இலக்கணங்களை அறிவார்கள்.

இன்றைய இளைஞனுக்கும் மத ஈடுபாடு ஏற்பட்டு விட்டால், அவன் கண்ணை மனது வென்று, நல்ல பெண்ணை நோக்கிக் கொண்டு போகும்

நன்றி: கவியரசர் கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்து மதம்."

இன்னும் பார்ப்போம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக