இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், மே 27, 2013

கொடைக்கானல்...!


 இரண்டு நாட்கள் முன் இங்கே நிலவும்  அக்னி நட்சத்திர வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க கொடைக்கானல் சென்றேன்.ஏறத்தாழ 7 வருடங்களுக்குப்  பின் இப்போது மீண்டும் செல்கிறேன்.நல்ல வேறுபாடு தெரிந்தது. ஏகப் பட்ட கும்பல் அம்முகிறது.எங்கே சென்றாலும் ட்ராபிக் ஜாம் தான்.எல்லா tourist spot டிலும் நுழைவுக் கட்டணம் போட்டு விட்டார்கள்.முன்பு குணா குகை சென்றபோது கட்டணம் கிடையாது .இப்போது வசூலிக்கிறார்கள்.




 கடைகளும் நிறைய வைத்திருக்கிறார்கள்.நிறைய காசு பார்க்கிறார்கள்.ஒரு சோளக்கருது ரூ 20 என்கிறார்கள்.அதையும் மக்கள் கும்பல் கும்பலாக மொய்த்து வாங்குகிறார்கள்.யாரும் பணத்தை சட்டை செய்வதாகத் தெரியவில்லை.ப.சிதம்பரம் சொன்னதுபோல மக்களுக்கு வாங்கும் சக்தி கூடிப் போயிருக்கிறது!



 நான் சென்றபோது நல்ல காலநிலை நிலவியது.சிலு சிலு எனத்தூரலுடன் சாரல் மழையில் நனைந்து அந்தக் குளூரினை  அனுபவித்தேன்.கொடைகானல் நகராட்சிக்கு நல்ல வருமானம் டூரிஸ்டுகளால் கிடைக்கிறது.சாலைகளை இன்னும் கொஞ்சம் விரிவுசெய்தால் நன்றாக இருக்கும்.பார்கிங் ப்ராப்ளம் நிறைய.
 வரும் போது பழனி செல்லும் மலைப் பாதையில் வந்தோம்.மிகவும் திர்ல்லிங்கான அனுபவமாக இருந்தது.குறுகிய சாலை,வளைவுகள் அதிகம்..ஹேர் பின் பெண்டுகள் 14 இருக்கிறது.ஒருபக்கம் முழுவதும் பள்ளத்தாக்கு மட்டுமே இருக்கிறது.மலைச் சரிவு எஸ்டேட்டுகளை பச்சைப் பசேலென பார்ப் பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கிறது.அதன் காட்சிகள் தான் இவைகள்.இவ்வழியே வருவது கொஞ்சம் சுற்று.அதிக கிலோமீட்டர்கள்.நல்ல அனுபவம் உள்ள ஓட்டுனர்களே ஓட்டமுடியும்.




கொடைக்கானலுக்குச் சென்று வர நினைப்பவர்கள் இந்த வழியிலும் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம்.யான் பெற்ற பேரு பெருக இவ் வையகம்...!

சனி, ஏப்ரல் 20, 2013

உண்மைக் காதல் மாறிப் போகுமா...?

 
 
கோடையில் நதிகள் வற்றிவிடும்
நதியே அழிந்து போகுமா என்ன ...
மழையினில் மீண்டும் வெள்ளம் வரும்
நதியும் வளைந்து நெளிந்து ஓடும்  ..
நாணலும் கரையினில் வளைந்து ஆடும்...!

மேகங்கள் நிலவினை மறைக்கக்  கூடும்..
நிலவே அழிந்து போகுமா என்ன..
மேகங்கள் விலகி கரைந்து போகும்
மீண்டும் நிலவு வெளியில் வரும்....
வெள்ளிபோல் குளிர்ச்சியான வெளிச்சமும் தரும்...!

இலையுதிர் காலத்தில் மரம் கிளைகளாய்த்  தேயும்...
மரமே அழிந்து போகுமா என்ன
வசந்தத்தில் மீண்டும் இலைகள் வளரும்
மரமும் பசுமையாய் மீண்டும் தளிரும் ...
பூக்களும் பூத்து புன்னகையும் புரியும்....!

வாழ்வினில் துன்பங்கள் வரக் கூடும்...
வாழ்வே முடிந்து போகுமா என்ன...
இன்பங்கள் மீண்டும் திரும்ப வரும்
இனிய வாழ்க்கை அதைத் தொடர்ந்து வரும் 
உறவும் நட்பும்  உன்னைத் தேடிவரும் .!
 
உண்மைக் காதலும் அதுபோல -
உலகிற்காக மறைத்து விட்டாலும்
இதயத்தில் சுவடாய்ப் பதிந்திருக்கும் 
இறக்கும் வரையினில் நிலைத்திருக்கும்..
எங்கோ ஒரு மூலையில் வாழ்வின் நெருடலாய்.....!



 

சனி, ஏப்ரல் 13, 2013

ஸ்ரீரங்கம்...!

ஸ்ரீரங்கம் பாய்ஸ் ஹை ஸ்கூலில் எங்கள் அடைய வளஞ்சான்  தெரு நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து கிரிக்கெட் டௌர்னெமெண்ட்  ஒவொரு முழு ஆண்டு தேர்வு விடுமுறையின் போதும் நடத்துவோம். ஹை ஸ்கூலில் பெர்மிஷென்  வாங்குவதே ஒரு பெரும் பாடு.கோவிந்தன் தான் அந்த வேலையை பார்த்துக் கொள்வான்.அடுத்து பிட்ச் தயார் பண்ணும் வேலை.காலங்கார்த்தால ஆறு மணிக்கெல்லாம் highschool  சென்று விடுவோம். புற்களை எல்லாம் வெட்டி எடுத்து நிலத்தை சமன் செய்து roller வைத்து உருட்டி ஒரு வழியாக பிட்சை தயார் செய்வோம்.
 
மேல சிந்தாமணி ,திருவானைக்காவல் ,டோல்கேட் பக்கமிருந்தெல்லாம் டீம் வரும்.கிட்டத்தட்ட பதினாறு அல்லது பதினெட்டு டீம் வரும். எங்களது டீமின் பெயர் விண்டீஸ்! அப்போதெல்லாம் வெஸ்ட் இண்டீஸ் டீம் தானே சிறந்து விளங்கும்...!அதன் சுருக்கம் தான் விண்டீஸ்! கோவிந்தன், பாம்பு பாலாஜி ,மார்ஷல்  என்ற ராமச்சந்திரன் (அவ்வளவு வேகமாக பந்து வீசுவானாம்) offside  நாராயணன் ( ஆப் சைடு அடிக்கும் ஷாட் கள்  வலுவானதாக இருக்கும் என்பதால் -ஸ்பின் bowler  கூட..!) R S வாசு, வெங்கிட்டு  (நிரந்தர விக்கெட் கீப்பர்!)சொக்கி ,ஆனந்து ,ஜவகர் ,    அப்புறம் எப்போதாவது  ஆள் பத்தவில்லை என்றால் நான்  (சின்ன  மார்ஷல் !)இது   தான் எங்கள் விண்டீஸ் டீம்!
 
ஸ்ரீரங்கத்திலிருந்தே  சித்திரை வீதி டீம் ,உத்திரை வீதி டீம், அம்மாமண்டம் ரோடு டீம்,ஸ்ரீனிவாச நகர்,ரெங்க நகர் என பல டீம்கள்  கலந்து கொள்ளும்.    சும்மா சொல்லக் கூடாது .ஒவ்வொரு போட்டியும் அனல் பறக்கும்.லீக் சுற்று ,நாக் அவுட் சுற்று என்று நடக்கும்.
 
லேடி அம்பயராக நின்றால் போச்சு! அவன் விக்கெட்டிலிருந்து  இரண்டு ஸ்டெப்பின்னாலசென்றால்கண்டிப்பாக அவுட்தரப் போகிறான்  என்று தெரிந்து
 கொள்ளலாம்!பிறகு," ஏண்டா இதுக்குப் போய் அவுட் தந்த ?"என்று கேட்டால் "போடா துரை எவ்வளவு ஸ்ட்ராங்கா அப்பீல் கேட்டான் ,  அதான் கொடுத்திட்டேன்" என்பான்!  
 
நாராயணன் offside ஷாட் அடிப்பதில் மன்னன்.நாராயணன் இறங்கினால் எதிர் அணியினர் offside பீல்டிங் ஐ ஸ்ட்ராங் செய்து கொண்டு விடுவார்கள்.எப்படி இருந்தாலும்  கன்சிஸ்டன்ட் ஆக ஒரு பதினைந்து அல்லது இருபது ரன் அடிக்காமல் அவுட் ஆக மாட்டான்! பந்து வீச்சிலும் அதே போல .ஸ்பின் போடுவதில் கில்லாடி. பந்து கண்ணா பின்னாவென்று திரும்பும்.இரண்டு விக்கெட் ஆவது எடுத்து விடுவான்.
 
மார்ஷல் என்கிற ராம சந்திரன்- முதல் ஸ்பெல் பௌலிங் அவனுடயதாகத்தான் இருக்கும். பயங்கர ஸ்பீடாக பந்து வீசுவான்.அதே போல ஆப் சைடு பீல்டிங்கிலும் கில்லாடி.கன்னாபின்னாவென்று விழுந்து ,பாய்ந்தெல்லாம் பந்தைப் பிடிப்பான். மேட்ச் முடிந்ததும் முரளி "அந்த கேட்ச் எப்படி பிடித்தேன் பாத்தியா? அந்த ரன்னை எப்படி தடுத்தேன் பாத்தியா?என்பான்! கால் ,கையிலெல்லாம் சிராய்ப்புடன்!" இன்னொரு ராமச்சந்திரனும் ஸ்பீட்  பௌலிங் போடுவான்.அவன்  பெயர் ஜொள்ளு ராமச்சந்திரன்!
 
இன்னும் வரும்...

திங்கள், மார்ச் 25, 2013

ஸ்ரீரங்கம்..எல்லக் கரையில் எம்பெருமான்...!

நேற்றைக்கு முதல் நாள் ஸ்ரீரெங்கநாதர் உறையூரில் நாச்சியார் தாயாருடன்  சேர்த்தி கண்டருளினார்.இன்று ஸ்ரீரங்கம் கொள்ளிடக் கரையில் எல்லக்கரை மண்டபம் எழுந்தருளினார்.நான் முன்பே ஒரு பதிவில் எழுதி இருந்த படி ஸ்ரீ ரெங்கநாதர் இந்த பங்குனித் தேர் திருவிழாவில் ஜீயபுரம்,உறையூர் மற்றும் எல்லக் கரை மண்டபம் என வெளி இடங்களுக்கு எழுந்தருளினார்.உறையூர் சென்று சேர்த்தி தரிசித்தேன்.இன்று எல்லக்கரையில் ஸ்ரீ ரெங்கநாதரை தரிசிக்கும் பேறு கிடைத்தது.சிறுவனாய் இருந்த போது வெள்ளித்திருமுத்தம் பெரிய வீட்டின் உபயத்திற்கு சென்று இருக்கிறேன்.அதன் பிறகு   என்றைக்கு  உபயம் எனத் தகவல்சரியாக எனக்குக்   கிடைக்காது.
அதனால்
 இந்த முறை நான், என்று வரும் எனக் காத்திருந்து தவறவிடாமல் சென்று தரிசித்தேன்.இந்த பேறு  கிடைக்க வைத்த அந்த
 அரங்கனின் தாழ் பணிந்து வணங்குகிறேன்.... அடுத்த முறை ஜீயபுரம்
 சென்று வரவும் அருள் புரிவார்  என நம்புகிறேன்....  
 

வியாழன், மார்ச் 14, 2013

பெற்றவர்கள் பட்டகடன் பிள்ளைகளை சேருமடி....


இது பிறந்து இரண்டு மாதமே ஆன நாய்க்குட்டி.மிகவும் நோஞ்சானாக உடல்முழுவதும் காயங்களுடன் தோல் உரிந்து மிகவும் பலவீனமாக 
இருந்தது.இன்று காலை  எனது site டிற்குள் நுழைந்த வுடன் இந்தக் 
குட்டி நாயைப் பார்த்து மிகவும் மூட் அவுட் ஆனேன். உடனே கடையிலிருந்து அதற்கு ரொட்டி வாங்கிப் போட்டேன்.பிறகு அங்கு வேலை பார்பவர்களிடம் இதைப் பற்றி விசாரித்தேன். இந்த நாய்க்குட்டி பிறந்து ஒரே மாதத்தில் இதன் தாய் ஒரு ரோடு விபத்தில் அடிபட்டு இறந்து விட்டது என்றும்  இறந்து போன தாயின் அருகே இரண்டு குட்டி நாய்கள் செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்ததாகவும், பிறகு இரண்டு குட்டிகளையும் இங்கு எடுத்து வந்ததாகவும் கூறினார்கள்.

இதில் இன்னும் ஒரு சோகம் தாய் இறந்த ஏக்கத்தில்  இதன் சகோதர நாயும் உணவு ஏதும் உண்ணாமல் ஒரே வாரத்தில் இறந்து போய் விட்டதாகவும் கூறினார்கள்.
 
பிறவிப் பயன் பற்றியும் ,முன்ஜென்ம பாவம் பற்றியும்,பெற்றவர்கள் செய்த பாவங்கள் பிள்ளைகளைச் சேரும் என்பது பற்றியும் எந்த நம்பிக்கையும் இல்லாமல் இருந்த எனக்கு இந்த நாயின் பிறவியும் ,
நிலையும்  எதையோ உணர்த்துவது போல இருந்தது.பிறந்து இரண்டு மாதங்களே ஆன இந்த நாயின் இப்படிப்பட்ட நிலைக்கு என்ன காரணம் இருக்கமுடியும்.?அதற்கு பாவ புண்ணியங்கள் பற்றி என்ன தெரியும்? இந்த குட்டி நாய்க்கு ஏன் இந்த நிலை?மனது வலித்தது.
 
ஆனால் ஒரு ஆறுதல் எனக்கு முன்பே அதன் மீது கருணை  கொண்டு தினமும் பாலும் ரொட்டியும்கொடுத்து வளர்த்து வரும் அந்த தொழிலாளர்களை  நினைத்து பெருமைப் பட்டேன்.
இன்னும்  இறக்க குணம்உள்ளவர்களும் இருக்கிறார்களே என்று
சந்தோஷப் பட்டேன்.தன்னால் படைக்கப் பட்ட ஒவ்வொரு உயிருக்கும் ஆண்டவன் ஏதாவது ஒரு வழியில் படி அளப்பான் என்பதையும் உணர்ந்து கொண்டேன்.
 
இன்று இந்த நாய்க் குட்டி எனக்கு நிறைய உண்மைகளை விளங்க வைத்தது.

செவ்வாய், மார்ச் 12, 2013

ஸ்ரீரங்கம் -- மகேந்திர மங்களம்

மகேந்திர மங்களம் ஸ்ரீரங்கத்திலிருந்து நாமக்கல் செல்லும் சாலையில்  முசிறியைத்   தாண்டி உள்ள ஒரு சிறிய கிராமம்.இங்கு பெரியவா சந்திர சேகரேந்திர சங்கராச்சாரியார் சுவாமிகள் இளம் வயதில் தங்கி இருந்து குருகுலம் பயின்ற பாடசாலை இருக்கிறது .அவர் தங்கியிருந்த, அவர் பாதம் பட்டமண்ணிற்கு  ,அவர் உண்டு உறங்கிய அந்த ,வீட்டிற்குச்  செல்லும் பெரும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.எனது நண்பர் திரு ஸ்ரீதர் (ரயில்வே ) 
அவர்களின் மூலம் இதைத் தெரிந்து கொண்டு அவருடன் கடந்த ஞாயிறு அன்று அங்கு சென்று தரிசனம் செய்து, சிறிது நேரம் தியானம் செய்து விட்டு வந்தேன்.மனதில் ஒரு இனம் புரியாத உணர்வு உண்டானது.மறைந்த எழுத்தாளர் திரு. சுஜாதா அவர்களின் பாட்டனார் திரு. சிங்கமையாங்கார் அவர்களுக்கு   உரிய இந்த வீட்டினையும் அதற்காக சில சொத்துக்களையும் அவர் இந்த பாட சாலையை நிர்வகிக்க தானமாக கொடுத்து விட்டதாக இந்த கல் வெட்டு கூறுகிறது.தற்போது ஸ்ரீரங்கம் கீழச் சித்திரை வீதி யில் திரு சுஜாதா அவர்களின் பூர்வீக வீட்டிற்கு எதிரில் அமைந்துள்ள கு.சி.பாடசாலையின் நிர்வாகத்தின் கீழ் இது பராமரிக்கப் பட்டு வருவதாக அங்கிருந்தவர்கள் கூறினார்கள்.
 




வாய்ப்பிருந்தால் நீங்களும் சென்று வரலாம்.இல்லை என்றால் இந்தப் படங்களைப் பார்த்து அந்த உணர்வினை நீங்களும் பெறலாம்.

வியாழன், மார்ச் 07, 2013

மனம் 12

மனதை நமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர முதலில் 
நம்மை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் எண்ணங்களை விட்டு வெளியே முழுவதுமாக வரவேண்டும்.இதற்கு இரண்டு வழிமுறைகள் உள்ளது.

ஒன்று அம்மாதிரி எண்ணங்களைக் கடந்து அவற்றில் நுழைந்து மனோ தைரியத்துடன் வெளி வருவது.

இரண்டாவது அந்த எண்ணங்களின் பக்கம் போகாமல் மனதினை வேறு பக்கம் செலுத்தி வேறு இடங்கள்,சூழ்நிலைகளுக்கு மாறி அதிலிருந்து மீண்டு வெளிவருவது.இதற்கு நீண்ட கால அவகாசம் தேவைப் படும்.ஏன் என்றால் நாம் எங்கே சென்றாலும் நாம் எண்ணங்கள் நம்முடனே தானே வரும்.? இதைத்தான் கவியரசர் "கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை"என்று எழுதினார் !

முதலாவது வழி ஓஷோ வின் கூற்றுப் படி எந்த நிகழ்வினையும் உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொள்ள வேண்டும்.இன்பமா வரட்டும் .துன்பமா அதுவும் வந்து விட்டுப் போகட்டும்.எல்லாவற்றையும் கடந்து வருவோம்.வாழ்க்கையை அதன் போக்கிலேயே விட்டு விடுவோம்.என்கின்ற மன நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
 
மனோதத்துவத்தில் ஒரு வழிமுறை கூறுவார்கள்.அதாவது போபியா என்ற எதைப் பார்த்தாலும் பயம் கொள்ளும் ஒருவகை மனவியல் சார்ந்த நோய்.தெனாலி  படத்தில் கமலுக்கு வந்த மனநோய் போல. இதிலிருந்து வெளிவர  உளவியல் வல்லுனர்கள் கூறும் ஒரு வழி,எதில் உங்களுக்கு பயம் வருகிறதோ அதை கொஞ்சம் கொஞ்சமாக  நாம் செய்து பார்த்து அதை மனதிற்கு பழக்கப் படுத்தி  விடுவது.அதாவது சிலபேருக்கு விமானம் பறப்பதைப்  பார்க்குக்கும் போது பயஉணர்ச்சி தோன்றும்.சிலருக்கு உயரமான இடத்திலிருந்து கீழே பார்க்கும் போது பயம் வரும். இவர்கள் விமானம் பறப்பதை கொஞ்சம் கொஞ்சமாக   பார்த்து பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும்.நாளடைவில் மனம் இதற்கு பழக்கப் பட்டு பயம் மறையும்.இது போலத்தான்  உயரமான இடத்திலிருந்து கீழே பார்க்கும் போது வரும் பயத்தினையும்  கொஞ்சம் கொஞ்சமாக பழக்கப் படுத்தி அதிலிருந்து வெளிவர முடியும்.
 
ஆக மனதிற்கு பிடிக்காத அல்லது மனம் வெறுக்கும்,பயம் கொள்ளும் எந்த 
நிகழ்வினையும்கொஞ்சம் கொஞ்சமாக பழக்கத்தின் மூலம் 
 கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வரலாம். 
இன்னும் வரும்....  

திங்கள், பிப்ரவரி 18, 2013

மனம்..11

நமது எண்ணங்களில் இரண்டு சாத்தியக் கூறுகள் உள்ளன.ஒன்று நாம் நினைத்ததுபோல எதிர் மறையாக நடந்து விடுவது.இல்லை எனில் நாம் 
எண்ணியபடி எதிர்மறையாக எதுவும் நடக்காமலே இருப்பது. எப்படியாயினும் நாம் நடப்பவற்றைக் கடந்து வந்து தான் ஆகவேண்டும்.எதிமரையாக நடக்கும் என இருப்பது எதிர்மறையாக நடந்தே தீரும் .இதை  தடுக்கும் சக்தி நமக்கு கிடையாது. அவ்வாறு நடக்கும் போது  நாம் வருந்தி தான் ஆகவேண்டும்.அதை அப்படியே ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும். இந்த உண்மையை மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கும் போது  தான் தற்கொலை எண்ணங்கள் தலை தூக்குகின்றன.இந்த நிலையில் பாரதி எழுதியதைப் போல 
 
"மோனத்திருக்குதடி இந்த வையகம் 
மூழ்கித் துயிலினிலே - நானொருவன் மட்டிலும் 
பிரிவென்பதோ நரகத்துழளுவதோ..."
 
என்று ஆகிவிடுகிறோம். இந்த உலகம் முழுவதும் தூக்கத்தில் ஆழ்ந்து இருக்கையில் நான் ஒருவன் மட்டும் தனியாக விழித்துக் கொண்டு  நரகத்தில்  இருப்பது போல இருக்கிறது என்கிறான் பாரதி.இது ஒரு கொடுமையான சூழ் நிலை தான்.
 
இதை  அந்தந்த நிலையில் இருப்பவர்கள் தான் உணர முடியும்.எதிலும் மனம் 
லயிக்காது.நடந்த துன்பமான நிகழ்வினைச்சுற்றியே மனம் சென்று 
கொண்டிருக்கும்.நிகழ் காலசூழ்நிலைகளில்மனம் ஒன்றாது.இதுவே இனிநாம் வாழ்ந்து என்ன?என்ற தற்கொலை எண்ணத்தை  உண்டாக்குகிறது.
 
இந்த நிலையிலிருந்து மீண்டுவரவேண்டும்.மனதை அடக்கி, அலசி நிகழ் காலத்தில் 
ஒன்றச்  செய்ய  வேண்டும்.சுருங்கச்சொன்னால் மனதின் இறுக்கத்தைப் போக்கி அதை 
இலகுவாக்க வேண்டும்.
 
ஓஷோகூறுவார்-
 
"கதவை மூடிக் கொள்ளுங்கள்.உங்கள் மனதிற்குள் தோன்றுவதை எந்த வித 
கட்டுப் பாடுகளும் இன்றி செய்யுங்கள்.அழத்தோன்று கிறதா நன்றாக அழுங்கள்.சிரிக்கத்தோன்று கிறதா?வாய்விட்டு சிரியுங்கள்.யாரையாவதுதிட்ட வேண்டுமாநன்றாகத்திட்டுங்கள். என்ன வேண்டுமோ கூச்சமின்றி ,தடையின்றி செய்யுங்கள்."என்கிறார். ஆம் இதுஒரு வகை தியானமே.இதனால் ஓரளவு மனம் இலேசாகும்.ஆனால் முழுவதுமாக உங்கள் மனம்  கவலைகளில் இருந்து வெளி வரஅதன் தன்மைகளுக்கு ஏற்ப கால அவகாசமும்,பயிற்சியும் தேவைப் படும்.
 
இன்னும் வரும்.... 
    
 

சனி, பிப்ரவரி 09, 2013

ஸ்ரீரங்கம் ஏ .எஸ் .முரளி !

                              

சனி நமது ஜாதகத்தில் எட்டாமிடத்தில் இருந்தால் அது அஷ்டமத்து சனியாம்...அது படாத பாடு படுத்துமாம்...எனக்கு இப்போது அஷ்டமத்தில் சனி .சரிதான் போலிருக்கிறது .மிகவும் சரியாகத்தான் நடக்கிறது.ப்ளொக்கரில் எழுதி ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது.எத்தனையோ எழுத திட்டமிட்டிருந்தேன்.முடியவில்லை.ஏனோ மனதில் ஒரு கவலை.இனம் புரியாத எண்ணங்கள்.அஷ்டமத்து சனியால் என்னவெல்லாம் ஆகும் என வலைப் பக்கங்களில் அலசினேன்.கிட்டத்தட்ட எல்லாம் சரியாகவே நடக்கிறது..!(ஆனால் சுக்கிரதசை அடிக்கும் என இருந்த காலங்களில் அவ்வாறு ஏதும் நடக்கவில்லை...!)

அது கிடக்கட்டும் ,இனிமேலாவது தொடர்ந்து எழுதலாம் என எண்ணுகிறேன்.ஒரு காலத்தில் தமிழில் வெளிவரும் முக்கியமான எல்லா பத்திரிகைகளிலும் ஸ்ரீரங்கம் ஏ .எஸ் .முரளி என்ற பெயரில் நிறைய எழுதி இருக்கிறேன்.எனவே அதே பெயரையே இப்போது ப்ளாக்கரிலும் வைத்து விட்டேன்.இனி பழைய உத்வேகத்துடன் நிறைய எழுதுவேன் என எண்ணுகிறேன்....

நான் ப்ளாக்கரில் எழுதாத இந்த ஒருமாத காலத்தில் தான் எனது ப்ளாக்கர் அதிகமாக படிக்கப் பட்டிருக்கிறது என்ற, எனக்குக் கிடைத்த புள்ளிவிவரமே நான் இவ்வாறு ஒரு சுய விளக்கம் தரக் காரணமாக இருந்தது. படிப்பவர்கள் உடனே இரண்டு வரிகளில் பின்னூட்டமும் தந்தால்தொடர்ந்து அதிகம்  எழுத உற்சாகம் கிடைக்கும்...

விரைவில் வருகிறேன்........!