இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், நவம்பர் 15, 2011

ஸ்ரீ ராகவேந்திரர் அருள் பார்வை.....5 !


மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீதரன்- கங்கா என்று ஒரு தம்பதியர். ஸ்ரீதரன் வங்கி ஒன்றில் அதிகாரியாக இருந்தபோது இதய நோய்க்காக "பைபாஸ்' செய்து கொண்டவர். இவர்களின் பிள்ளைகள் அமெரிக்காவில் பணிபுரிகிறார் கள். ஸ்ரீதரன்- கங்கா தம்பதியரும் ஸ்ரீராகவேந்திர பக்தர்கள். ஒரு சமயம் ஸ்ரீதரனை வீட்டிலேயே விட்டுவிட்டு கங்காவும் அவருடைய உடன் பிறந்த அண்ணன், தம்பி, அக்காள் என அனைவரும் திருவள்ளூருக்கு அருகிலுள்ள இறைமங்கலம் எனும் கிராமத்திலிருக்கும் ஸ்ரீராக வேந்திர மடத்திற்குச் சென்றுள்ளனர். பூஜை, புனஸ்காரம், அன்னதானம் முடிந்தபோது திருமதி கங்காவிற்கு ஓர் அதிர்ச்சிகரமான தொலைபேசி செய்தி வந்தது.

"வீட்டில் தனியாக இருந்த ஸ்ரீதரன் திடீரென மயங்கி விழுந்து, உடல் நலம் குன்றி ஆபத்தான நிலையில் இருக்கிறார். ப்ளாட்டில் இருந்தவர்கள் சென்னையின் புகழ் பெற்ற ஒரு மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறார்கள். உடனே மருத்துவமனைக்கு வரவும்.' -இப்படி செய்தி வந்தவுடன் திருமதி கங்காவும் உறவினர்களும் அலறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடிவர, ஆபத்தான செய்தியை மருத்துவர்கள் தெரிவித்தனர். மூளை சிறிது சிறிதாக செயலிழக்கத் துவங்கிவிட்டதாகவும், உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டுமெனவும் டாக்டர் கள் கூற, எப்படியாவது பிழைத்தால் போதும் என உறவினர்கள் சொல்லிவிட்டனர். மூளை ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தும், சில மணி நேரங்களில் "கோமா' நிலையை அடைந்து விட்டார் ஸ்ரீதரன். எவ்வளவோ முயற்சித்தும் பயனில்லாமல் போய்விட்டது. மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர். டெல்லியிலிருந்து கோவை வரை உள்ள உறவினர்கள் அனைவரும் வந்துவிட்டார்கள். இன்னும் சில மணி நேரங்களிலோ ஓரிரு நாளிலோ ஸ்ரீதரனின் கதை முடிந்துவிடும் நிலை. அப்போதுதான் ஸ்ரீராகவேந்திரரின் அருட்கடாட்சம் கிடைத்தது.


நள்ளிரவில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு முதியவர் நுழைகிறார். இந்த அகால நேரத்தில் ஒரு முதியவர் நுழைவ தைக் கண்ட இரவுப் பணி மருத்துவர்கள் சிலர் தூரத்திலிருந்து ஓடி வருகிறார்கள். அவர்கள் வந்து ஐ.சி.யூ.வின் கதவைத் திறந்து பார்த்தபோது அந்த முதியவரைக் காணவில்லை. ஆனால் கோமா நிலையிலிருந்த ஸ்ரீதரன் எழுந்து உட்கார்ந்திருந்தார். மருத்துவர்கள் வியப்புற்று ஸ்ரீதரனை என்ன நிகழ்ந்தது என்று கேட்க, தன் காதருகே "ஸ்ரீதரா... உனக்கு ஒன்றுமில்லை; எழுந்து உட்கார்' என்று மூன்று முறை யாரோ சொன்னதாகவும்; எழுந்து உட்கார்ந்தபோது வேகமாக ஒரு பெரியவர் வெளியே போனதைப் பார்த்ததாகவும் சொன்னார்.


யார் அந்தப் பெரியவர்? ஸ்ரீதரன்- கங்கா தம்பதியர் வந்தவர் ஸ்ரீராகவேந்திரரே என்று பக்தியுடன் சொல்கிறார்கள். உண்மை... இது சத்தியம்! எண்ணற்ற பக்தர்களின் குறையை நீக்க கல்ப விருக்ஷமாய்- காமதேனுவாய் இருந்து, அதர்மங்கள் பெருகும் இக்கலியுகத்தில் ஸ்ரீராகவேந்திரர் அருள்புரிகிறார் என்பது நிஜம். நாமும் அவரை மனதாரத் துதிப் போமாக!


"பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாய ச
பஜதாம் கல்ப வ்ருக்ஷாய நமதாம் காமதேனவே!'

உண்மைச் சம்பவங்கள்

                          கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகங்களில் நிகழும் அதர்ம காரியங்களை வேரறுப்பதற்காக எம்பெருமான் நாராயணன் ஒவ்வொரு யுகங்களிலும் சில அவதாரங்கள் எடுக்க விரும்பினார். இதை அறிந்த பிரம்ம தேவன், ஸ்ரீமன் நாராயணன் எடுக்கப் போகும் பத்து அவதாரங்கள் என்னவென்று அறிந்து, அந்த அவதாரங்களை மனதில் நினைத்துப் பூஜை செய்ய விரும்பினார். ஆனால் அப்படிப் பூஜை செய்வதற்கான நறுமணமுள்ள மலர்கள் சத்திய லோகத்தில் கிடைப்பது அரிது என்பதால், தன்னுடைய தேவதைகளில் ஒருவரான சங்குகர்ணன் என்பவரை பூலோகத்திற்கு அனுப்பி மல்லிகை, ரோஜா, செம்பருத்தி, பாரிஜாதம், பவளமல்லி, தாழம்பூ போன்ற மலர்களை தினமும் எடுத்து வரப் பணித்தார். சங்குகர்ணனும் தினமும் பூமிக்கு வந்து மலர்களைப் பறித்துச் சென்று பிரம்மா விடம் கொடுத்தார். ஒவ்வொரு யுகத்திலும் நாராயணன் எடுக்கவிருக்கும் மூர்த்தங்களுக்கு ஏற்ப பூஜை செய்து வந்தார் பிரம்மா.

அன்று...


திரேதா யுகத்தில் எடுக்கப்போகும் ஸ்ரீ ராமாவதாரத்திற்கான பூஜை ஆரம்பமானது. ஒவ்வொரு மலராக சங்குகர்ணன் எடுத்து பிரம்மாவிடம் கொடுக்க, பிரம்மா அர்ச்சனை செய்தார். திடீரென்று சங்குகர்ணனிடமிருந்து மலர் வராததைக் கண்ட பிரம்மதேவன் திரும்பிப் பார்த்தார். ஸ்ரீராமனுடைய அழகிலும் கம்பீரத் திலும் தர்மத்திலும் தன் மனதைப் பறிகொடுத்த சங்குகர்ணன் மலர் கொடுப்பதை மறந்து மயங்கி நின்று கொண்டிருந்தார். மலர் தராததால் கோபம் கொண்ட பிரம்மா, ""பூமியில் நீ பிறந்து, எந்த ராமனுடைய பெருமையில் மயங்கினாயோ- அவருடைய அவதாரப் பெருமையை மக்களுக்கு உபதேசித்து மீண்டும் சத்திய லோகத்திற்கு வருவாயாக!'' என்று சபித்தார்.


சங்குகர்ணன் திடுக்கிட்டார். ஆனாலும் பிரம்மனின் சாபமாயிற்றே? அதனால் கிருத யுகத்தில் பிரகலாதனாகப் பிறந்து நரசிம்ம அவதாரத்தையும்; திரேதா யுகத்தில் ஸ்ரீராமனையும் கண்டார். பின்னர் துவாபர யுகத்தில் பாஹ்லீகன் என்கிற அரசனாகப் பிறந்து கிருஷ்ண சேவை செய்து, கடைசியில் இந்தக் கலியுகத்தில் ஸ்ரீகிருஷ்ண தேவராயரின் குலகுருவான ஸ்ரீ வியாசராஜராகவும், பின்னர் ஸ்ரீராகவேந்திரராகவும் அவதரித்து, பூமியில் பல புண்ணிய காரியங்களைச் செய்து, மக்களை அருள் மார்க்கத்தில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்.


ஒருசமயம் ஸ்ரீராகவேந்திரர் தங்கியிருந்த இடத்திற்கு வந்த மூன்று பிரபலமான மலையாள ஜோதிடர்கள், அவருடைய ஜாதகத்தை வாங்கி அவருடைய ஆயுள் பாவத்தைக் குறித்துத் தந்தனர். ஒரு ஜோதிடர் சுவாமிகளுடைய ஆயுள் எழுபது ஆண்டுகள் எனவும்; இரண்டாமவர் முந்நூறு ஆண்டுகள் எனவும்; மூன்றாவது ஜோதிடர் எழுநூறு ஆண்டுகள் எனவும் சொல்ல, கூடியிருந்த மக்கள் ஜோதிடர்களைக் கேலி செய்தார்கள்.


""ஒரு மனிதர் முந்நூறு ஆண்டுகளும் எழுநூறு ஆண்டுகளும் உயிர் வாழ முடியுமா?'' என்று அவர்கள் கேட்க, சுவாமிகள் அனைவரையும் அமைதியாக இருக்கச் சொல்லி, மூவரும் சரியாகக் கணித்திருக்கிறார்கள் என்று கூறி, அதற்கு விளக்கமும் அளித்தார்.


அதாவது, தன்னுடைய உடல் இந்த மண்ணில் எழுபது ஆண்டுகள் இருக்கும் என்றும்; ஜீவசமாதி அடைந்து முந்நூறு ஆண்டுகள் பிருந்தாவனத்தில் இருக்கப் போவதாகவும்; தன்னை உள்ளன்போடு நேசிக்கும் மக்களோடு தான் எழுநூறு ஆண்டுகள் இருக்கப் போவதாகவும்; முடிவாக பிரம்ம லோகம் சென்று சங்குகர்ணனாக இருக்கப் போவதாகவும் தெரிவித்தார்.


1601-ஆம் ஆண்டு, தமிழகத்தில் கடலூர் மாவட்டத்திலுள்ள புவனகிரியில் அவதரித்த சுவாமிகள், 1671-ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசம் மந்த்ராலயத்தில் பிருந்தாவனப் பிரவேசம் செய்தார். பின்னர் முந்நூறு ஆண்டுகள் -அதாவது 1971-ஆம் ஆண்டு வரை பிருந்தாவனத்தில் இருந்தவாறே தன் பக்தர் களுக்கு அருள்புரிந்தார். பின்னர் 2671-ஆம் ஆண்டு வரை தன் பக்தர்களுக்காக நேரிலேயே வந்து அருள்புரிவார் என்பது ஐதீகம். இதை ஸ்ரீ ராகவேந்திரர் பலமுறை தன் பக்தர்களுக்கு உணர்த்தியிருக்கிறார். எண்ணற்ற பக்தர்கள் ஸ்ரீ சுவாமிகள் மூலமாகப் பயனடைந்ததைத் தெரிவிக்கின்றனர். அவற்றில் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.


சென்னை திருவல்லிக்கேணியில் ஸ்ரீனிவாஸ்- சரஸ்வதி என்னும் தம்பதியர் ஸ்ரீராகவேந்திரரின் தீவிர பக்தர்கள். நான்கு ஆண் பிள்ளைகளுக்குப் பிறகு ஐந்தாவதாக ஒரு பெண். செல்லமாய் வளர்ந்த அப்பெண்ணுக்கு பத்து வயது நிரம்பியபோது, பள்ளியிலிருந்து வந்த அவள் காய்ச்சலால் சுருண்டு படுத்து விட்டாள். மருத் துவரிடம் காட்டியும் காய்ச்சல் குணமாக வில்லை. காய்ச்சல் 104 டிகிரி வரை தீவிர மடைந்தது. டைபாய்டு என்று கண்டுபிடித்து மருந்து கொடுக்கத் தொடங்கினார்கள். இரண்டு மூன்று வாரங்கள் சென்றும் நோய் குணமாகவில்லை. மருத்துவமனையில் சேருங்கள் என்று மருத்துவர் சொல்லிவிட்டார். ஆனால் அந்தப் பெண் அன்றிரவு கிட்டத்தட்ட "கோமா' நிலையை அடைந்த போது, இனி செய்வதற்கு எதுவுமில்லை என்று மருத்துவர் கைவிரித்து விட்டார். ""இனி உங்கள் பெண்ணை அந்த ராகவேந்திரர்தான் காப்பாற்ற வேண்டும். நாளைய பொழுது உங்களுக்கு நல்லபடியாக விடிய நானும் இறைவனை வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லை'' என்று சொல்லிவிட்டார் மருத்துவர். என்ன செய்வது? ஸ்ரீனிவாஸ்- சரஸ்வதி தம்பதியரும், வீட்டிலிருந்த பிள்ளைகளும் ஸ்ரீராகவேந்திரர் படத்தின்முன் அமர்ந்து அழுதுகொண்டே பிரார்த்தித்தனர். நள்ளிரவு தாண்டியது. அனைவரும் துக்கமாக- அதே சமயத்தில் தூக்க மயமாகவும் இருந்த நேரத்தில் அந்த அற்புதம் நிகழ்ந்தது.


கிட்டத்தட்ட கோமா நிலையில் படுத்திருந்த அந்தப் பெண்ணின் தலையருகே, ஜெகஜ்ஜோதி யாய் ஒரு பெரியவர் நின்று கொண்டு அவளின் தலையைத் தொடுகிற மாதிரி ஓர் உணர்வை அந்த ஹாலில் இருந்த அனைவரும் உணர்ந்தனர். சட்டென்று கண்விழித்து எல்லா விளக்குகளை யும் போட்டபோது அவரைக் காணவில்லை. அதே நேரத்தில் அந்தப் பெண்ணின் உடல் வியர்வையில் நனைந்திருந்தது. மெதுவாகக் கண்விழித்தாள் அவள். தர்மாமீட்டரில் பார்த்தபோது உடலின் வெப்பம் 98.4 டிகிரி இருந்தது. "குடிக்க ஏதாவது கொடுங்கள்' என்று சைகை செய்தாள். கொடுத்தார்கள். மறுநாள் வந்து பார்த்த மருத்துவர் வியந்தார். இன்று அவள் பெண்ணல்ல; பெண்மணி. கிட்டத்தட்ட ஐம்பது வயதாகும் அந்த அம்மையாருக்கு ஒரு பெண்ணும் பையனும். பெண் மருத்துவராகவும் பையன் நிர்வாக அதிகாரியாகவும் இருக்கிறார் கள். கணவர் தொழிலதிபர். அவர் பெயர் ராக வேந்திரன்!


                                                                          நன்றி:www .sivaraghavendra .com  
அற்புதங்கள் தொடரும்....!

4 கருத்துகள்:

ஷைலஜா சொன்னது…

ஸ்ரீ ராகவேந்திரரை நம்பினால் கைவிடவே மாட்டார் உங்கள் பதிவு மனதை நெகிழவைக்கிறது.

Ragavmurali சொன்னது…

நன்றி ஷைலஜா அவர்களே.ஸ்ரீ ராகவேந்திரர் பற்றி இன்னும் நிறைய எழுதும் உத்தேசம் உள்ளது!

Raghavandhya சொன்னது…

Sri Raghavendirarin Arul Paarvai Engal Vaazhvilum Kidaikkuma? Manadhil evvalavo ennangalum, sogangalum ullana. Avai aanaal solvadharkillai. Engalukkaga Sri Raghavendiraridam Vendikkollungal.

Ragavmurali சொன்னது…

கண்டிப்பாக. மனமுருகி வேண்டுபவர்களுக்கு ஸ்ரீ ராகவேந்திரரின் அருள் பார்வை கிடைக்கும். உங்கள் துன்பங்கள் நீங்க அவர் கண்டிப்பாக அருள்புரிவார்.கவலை வேண்டாம்.
இதை தெரிவிப்பதற்கு எனவே ஒரு ப்ளாக் ஐ உங்களை துவங்க வைத்ததுவே ஸ்ரீ ராகவேந்திரர் தான் என நினைக்கிறேன்!
நன்றி,ஸ்ரீ ராகவேந்திரரின் அருள் பார்வை உங்களுக்கும் கிடைக்க வாழ்த்துகிறேன்,,,.

கருத்துரையிடுக