இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், நவம்பர் 14, 2011

மனம்.......5 !

                  சென்ற அத்தியாயத்தில் சொன்னவாறு  பெற்றோருக்கு மட்டும் தான் தங்கள் பிள்ளைகளை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறதா? இல்லை.பிள்ளைகளுக்கும் அதே போலத்தான். தங்கள் தாய்  தந்தையரை மகிழ்ச்சியுடன் வைத்திருக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அவர்களுக்கும் உள்ளது. பிறர்  என்னசொல்லுவார்களோ என்று நினைத்து அவர்களின் மகிழ்ச்சிக்கு தடை போடும் பிள்ளைகளை நான் பார்த்திருக்கிறேன் . ஏன் இதெல்லாம் வருகிறது.?மற்றவர்கள் சொல்வதை எல்லாம்  மனதில் போட்டு நிரப்பிக் கொண்டு அதில் இருந்து  மீள முடியாமல் போவதால் வருவது இது.

     எனக்குத்தெரிந்து ஒரு 50 வயது நிரம்பியவர் தனது பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் மணம் செய்து கொடுத்து விட்டார்.மனைவியை இழந்த அவர்  தனி ஆளாக நின்று பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து திருமணமும் செய்து கொடுத்து விட்டார். இப்போது அவர் தனிமையில்.அவர் பிள்ளைகளோ அமரிக்காவிலும் பாம்பே யிலும்  செட்டிலாகிவிட்டார்கள்.இந்த வயதில்  அவருக்கு விவாகரத்து ஆனஒரு பெண்மணியிடம் அன்பு உண்டாக இருவரும் வாழ்க்கையில் இணைய முடிவு எடுத்த போது அவர்களின் பிள்ளைகள் அவரை படுத்தி எடுத்து விட்டனர். இந்த வயதில் உனக்கு இது தேவையா?எங்கள் மாமனார் வீட்டில் என்ன நினைப்பார்கள்.?உறவினர்கள் என்ன நினைப்பார்கள்? ஊரார் என்ன நினைப்பார்கள்? அப்படி இப்படி என அவரை ஒரு வழி பண்ணிவிட்டார்கள். 
        தங்களால் தங்கள் அப்பாவை அடிக்கடி வந்து பார்க்கமுடியாது அப்பாவுக்கு இனி அருகில் யாரும் இல்லை என்பதை நினைத்துக் கூட பார்ககமுடிய வில்லை அவர்களால். அவர்களுக்கு தங்கள் தந்தை தனது இறுதிக் காலத்தில் எப்படி இருப்பார் என்ற கவலை துளியும் இல்லை. அவர்களுக்கு வேண்டியது எல்லாம் வெளி உலகின் பார்வை பற்றித்தான்.   
              ஏன் என்றால் மற்றவர்கள் சொல்வதை எல்லாம் தங்கள் மனதில் அவர்கள் ஏற்றிக் கொண்டு விட்டார்கள்.அவர்களுக்கு அதில் இருந்து  மீண்டு வந்து எதார்த்தத்தை பார்க்கும் மனது இல்லை. அதனால் அவர்களுக்கு  தனது தந்தையின் எதிர் காலத்தைப் பற்றி யோசிக்கும் மனநிலை  உண்டாகவில்லை. தங்களது தந்தைக்கு எது நல்லதோ,எது மகிழ்ச்சியோ அதை ஆதரிக்க அவர்களுக்கு மனது ஒப்பவில்லை.
                                     ஒருவர் வயதான காலத்தில் வேறு ஒரு துணை யை நாடுவது தவறு என்றும் வயதான பிள்ளைகள் இருக்க வேறு திருமணம் செய்யக் கூடாது என்றும் வெளி உலகம் கூறிக் கொண்டிருப்பதை தங்கள் மனதில் ஏற்றிக் கொண்டு விட்டார்கள்.இப்போது அதை மீறுவதை பெரிய கவுரவக் குறைச்சலாக ஒரு போலியான எண்ணத்தை மனதில் ஏற்றிக் கொண்டு விட்டார்கள்! 
                     அவர்கள் ஏன் தங்கள் மனதை இவ்வாறு கட்டிப் போட்டுக் கொண்டு விட்டார்கள்? அவர்கள் வாழ்க்கையில் நன்கு செட்டில் ஆனபின் இப்போது தங்கள் தந்தை யின்  எதிர் காலத்தையும் அவரின் மகிழ்ச்சியையும்  ஏன் கவனத்தில் கொள்ளமுடியவில்லை.? மனம் தான் காரணம்!
               
  போலியான மனக் கட்டுப் பாட்டிலிருந்து வெளியே வாருங்கள்! மற்றவர்களின் மகிழ்ச்சியையும் பாருங்கள் . அவர்களுக்கு வேண்டியதை செய்யுங்கள்.அவர்களின் மகிழ்ச்சியை நீங்களும் பாருங்கள்.அவர்களுடன் அந்த மகிழ்ச்சியை கொண்டாடுங்கள்! அதுதான் வாழ்க்கை !
             
எல்லோரும் மகிழ்ச்சியுடன் வாழத்தானே வாழ்க்கை?
           
மனதை மாற்றுங்கள் ...மகிழ்ச்சி பொங்கும்...இன்பம் தங்கும்...!

இன்னும் அலசுவேன்.....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக