இந்த வலைப்பதிவில் தேடு

சனி, ஏப்ரல் 21, 2012

கடவுள் நம்பிக்கை.

இவ்வளவு காலமாக நான் எழுதிவரும் விஷயங்களை படிக்கும் எல்லோருக்கும் மனதில் ஒரு கேள்வி எழும்.எப்படி ஸ்ரீ ராகவேந்திரர் இந்த முரளி வேண்டியவுடன் ஏதாவது ஒரு உருவத்தில் அல்லது ஏதோ ஒரு வழியில் வந்து சரியாக உதவுகிறார்?.நானும் தான் கடவுள்களை வேண்டுகிறேன்,ஆனால் எனக்கு எந்தக் கடவுளும் உதவ வில்லையே என்று.

உண்மையில் பார்த்தால் கிட்டத்தட்ட எண்பதுகளில் ஆரம்பித்து இன்றுவரை சுமார் முப்பது ஆண்டுகால இடைவெளியில் நடந்தவைகளை தான் நான் எழுதியிருக்கிறேன்.அப்படியானால் இந்த நீண்ட கால இடைவெளியில் எனக்கும் பல துன்பியல் சம்பவங்கள் நடந்து இருக்கின்றன.  பல துன்பமான காலகட்டங்களில் நான் கடவுளை வேண்டியது போல எனக்கும் பல விஷயங்கள் நடக்காமல் போயிருக்கின்றன.

 இவை ஏன் என்று யோசிக்கும் போது எனக்கு இப்படித் தோன்றுகிறது. சில வகைத்துன்பங்களை நமக்கு கடவுள் இவன் அனுபவித்தே ஆகவேண்டும் என்று ஒரு தண்டனை போலவே தந்துவிடுகிறான்.அவைகளை நாம் அனுபவித்தே ஆக வேண்டி இருக்கிறது.ஏனென்றால் நமது கர்ம வினைகளின் காரணமாகவோ அல்லது இந்தப் பிறவியிலேயே நாம் செய்துவிட்ட பாவச் செயல்களினாலோ நமக்கு இந்த தண்டனைகள் கிடைக்கின்றது. நமது கர்ம வினைகளுக்கான தண்டனையும் இந்த பிறவிக்கான தண்டனைகளையும் நாம் இந்தப் பிறவியிலேயே அனுபவிக்க வேண்டும் என்பதே இறைவனின் சித்தம்.அப்படி அனுபவித்து விட்டால் அடுத்த பிறவியில் நமக்கு முக்தியோ அல்லது  இதைவிட ஒரு நல்ல பிறப்போ நிச்சயம்.

அதனால் தான் கடவுளின் மீது தீவிர பற்று கொண்டவர்கள் ஏதாவது துன்பங்களை அனுபவித்தாலும் அவர்கள் அதிலிருந்து விரைவில் மீண்டு வந்து விடுவார்கள். எப்படி ஒரு குழந்தை நீச்சல்  கற்றுக்கொள்ளும் போது அதன்  தாயோ அல்லது தந்தையோ அந்தக் குழந்தை  எந்த பாதிப்புக்கும் உள்ளாகாமல் நீச்சல் கற்றுக் கொள்ளும் வரை அருகிலேயே இருக்கிறார்களோ அதே போல அந்த இறைவனும் நாம் துன்பங்களை அனுபவிக்கும் காலங்களில் நம் கூடவே இருந்து அதிலிருந்து வெற்றிகரமாக் மீண்டு வர நிச்சயம் உதவுவார்.

இதைத்தான் திரு ரஜினிகாந்த் அவர்கள் பாட்ஷா படத்தில் "நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனால் கை விட மாட்டான்,கெட்டவர்களுக்கு நிறைய தருவான் ஆனா கை விட்டுடுவான்"என்று கூறுவார். 

இதை நன்றாக உணர்ந்து பார்த்தால் அநேகமாக எல்லா ஆஸ்திகர்களும் மனம் நொந்து கேட்கும் " கெட்டவர்கள் எல்லாம் நன்றாக இருகிறார்கள் .நல்லவர்கள் மட்டும் ஏன் இவ்வளவு துன்பம் அனுபவிக்கிறார்கள்?" என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.

அதாவது நல்லவர்களுக்கு துன்பங்கள் இந்தப் பிறவியிலேயே முடிந்து விடும்.கெட்டவர்களுக்கான தண்டனைகளுக்கு இந்தப் பிறவி போதாததால் அடுத்த பிறப்பில் அவரவர்க்கான பிறவிகளும் அதற்கான தண்டனைகளும் தொடரும்! இதுதான் இறைவனின் நியதி! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக