இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, டிசம்பர் 21, 2012

ஸ்ரீரங்கம்..

ஸ்ரீரங்கத்தில்  ஸ்ரீரங்க நாதருக்கு வருடம் முழுவதும் ஏதாவது திருநாள் நடந்து கொண்டே இருக்கும்.இதனாலேயே வயதான காலத்தில் ஆன்மீகப் பற்றுள்ள முதியவர்கள் எல்லாம் ஸ்ரீரங்கத்திலேயே வசிக்க ஆசைப் படுவார்கள்.அதுவும் ஸ்ரீரங்கத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் என்றால் அந்த விருப்பம் பல மடங்கு இருக்கும்.

பங்குனித் தேர் திருவிழா பத்து நாட்கள் நடக்கும்.இந்தப் பங்குனித் தேர் திருவிழாவிற்கு தான் ஸ்ரீ ரங்கநாதர் அதிகமாக ஸ்ரீரங்கத்தை விட்டு வெளியே செல்வார். உறையூர் ஒரு நாள்,ஜீயபுரம் ஒரு நாள் ,மற்றும் கொள்ளிடக் கரையை ஒட்டிய  எல்லக் கரை மண்டபம் ஒரு நாள் என வெளியே செல்வார்.

இந்த எல்லக் கரை மண்டபத்தில் பெருமாள் தங்கும் போது  ஒரு நாள் உபயம் . தவிர பெருமாளை சுமந்து வரும் அனைவருக்கும் தடபுடலாக  விருந்தும்  அளிப்பார்கள் இடத்து உரிமையாளர்கள்.ஏனென்றால் பெருமாள் ஒரு நாள் முழுவதும் அங்கேயே இருந்து விட்டு மாலையில் தான் ஸ்ரீரங்கம் திரும்புவார் .

.அந்தக் கொள்ளிடக் கரையிலிருந்து சற்று தள்ளி இருந்த ஒரு  வீட்டில் மேல் உள்ள ரூம் ஒன்றில் என்னுடன் படித்த  நண்பன் ஒருவன தங்கியிருந்தான்.

கீழ் வீட்டிலிருந்த ஒரு பெண், அவனுடன் சாதாரணமாகப் பழகத் துவங்கி பிறகு காதல் வரை  இருவரும் சென்று விட்டார்கள்.அந்தப் பெண்ணை ஓரிரு முறை நானும் பார்த்திருக்கிறேன், ஒருவரை ஒருவர் இனி பிரிய முடியாது  என்பது வரை சென்று விட்டார்கள்.இதை அவன் என்னிடம் பலமுறை சந்தோஷத்துடன் கூறியதுண்டு. சில நாட்கள் நானும் அந்த நண்பனும் அப்படியே காலார கொள்ளிடம் பாலம் சென்று அங்குள்ள நடை பாதையில்  நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்போம்.

அவன் அந்தப் பெண் மீது வைத்துள்ள ஆசையைப் பற்றிக் கூறும் போது  அப்படியே வியப்புடன் கேட்டுக் கொண்டிருப்பேன். சில நாட்களில் படிப்பு முடிந்து அவன் சொந்த ஊருக்குச் சென்றான். 

 பிறகு சில வருடங்கள் அவனைப் பார்க்க முடியவில்லை. சமீபத்தில் எங்கள் இருவருக்கும் தெரிந்த   நண்பன் ஒருவனை பெங்களூரில் பார்க்க நேரிட்டது. எதை எதையோ பேசி கடைசியில் அந்த ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்த நண்பனைப் பற்றிய  பேச்சு வந்தது.

"உனக்குத் தெரியாதா? நம்ம ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டான்"
என்றான்.எனக்கு ஒரு கணம் பகீர் என்றது.

"யாருடா?அந்தக் கொள்ளிடத்தின் அருகில் உள்ள வீட்டில் தங்கியிருந்து நம்முடன் படித்தானே அவனா?"

"ஆமாம்டா  அவனே தான் .எனக்கே போன மாதம் தான் விஷயம் தெரியும் .
அவன் இறந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகி விட்டதாம் "என்றான்.

"ஏண்டா?மடையன் ஏன் இப்படி செய்தான்?"

"எல்லாம் காதல் தோல்வி தான்.ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்தானாம். "

"சரி .அதற்க்கு என்ன?"

"அந்தப் பெண் வீட்டிற்குத் தெரிந்து விட்டதாம்.அவர்கள் அந்தப் பெண்ணிடம் நீ அந்தப் பையனை  மறக்கா  விட்டால் நாங்கள்  எல்லோரும் செத்து விடுவோம் என்று  மிரட்டி இருக்கிறார்கள்.பயந்து போன அந்தப் பெண் இதை அவனிடம் கூறி ,தன்னை மறந்து விடு என்று கூறி சென்று விட்டாள் .பிறகு அவனைப் பார்ப்பதையும் அவனுடன் பேசுவதையும் தவிர்த்து வந்திருக்கிறாள். இந்த வேதனையை மறக்க முடியாமல் அவன் விஷம்  குடித்துத்  தற்கொலை செய்து கொண்டானாம்."என்றான்.

அவன் இதைக் கூறி விட்டுச் சென்று வெகு நேரமாகியும் என்னால் நிகழ் காலத்திற்கு வரமுடியவில்லை.அவனுடன் மாலை நேரங்களில் சுற்றியதும் ,கொள்ளிடம் பாலத்தில் நின்று கொண்டு அவன் காதலியைப் பற்றி உருகி உருகி பேசியதும்  நினைவில் சுழன்று கொண்டே இருந்தது.

சில நாட்கள் சென்று நான் ஸ்ரீரங்கம் வந்த போது அவன் நினைவுகள் வந்தது. என்னாலேயே அவன் நினைவுகளை  மறக்க முடியவில்லை.பாவம் அந்தப் பெண்ணிற்கு எப்படி இருக்கும்?என மனம் நினைத்தது.  

கொள்ளிடக் கரைக்கு   அவள் வீட்டுப் பக்கம் சென்றேன். வீட்டின் அருகில் செல்லலாமா அல்லது வேண்டாமா என மனம் போராடியது. அருகில் உள்ள டீ கடையில் ஒரு டீ  சொல்லி விட்டு உட்கார்ந்தேன். 

அப்போது  பைக் கில் ஒரு பையனும் ஒரு பெண்ணும் கட்டிப் பிடித்த படி  சிரித்து சந்தோஷமாக உட் புறமாக சென்றதைப் பார்த்தேன். நன்றாகப் பார்த்தபின் தான் தெரிந்தது,அது என் நண்பனின் முன்னாள் காதலியே தான்.

மெல்ல அந்த டீ  கடைக் காரரிடம்  விசாரித்தேன்."சந்தோஷமா போறாங்களே ரெண்டு பேரும் யாருங்க அது?"

"அதுங்களா அவுங்க  கல்யாணம் பண்ணிக்கப் போறாங்க.இரண்டு பேரும் உறவுக் காரங்களாம்"என்றார்.

டீ குடிக்க மனம் இல்லாமல் கீழே கொட்டிவிட்டு கடையை விட்டு வெளியே வந்த என்னை  கடையில் நின்றவர்களும் கடைக் காரரும் ஒரு மாதிரியாகப் பார்த்தனர்.

அதன் பிறகு அந்தப் பக்கமோ அந்தக் கொள்ளிடம் பாலம் பக்கமோ போகவே எனக்குப் பிடிக்கவில்லை.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக