இந்த வலைப்பதிவில் தேடு

சனி, டிசம்பர் 10, 2011

மனம்...7 !

           மனம்... எப்போதும் எண்ணி எண்ணி ஏங்குவது அதன் இயல்பு. இங்கிருந்து பார்த்தால் அந்தப் பக்கம் உள்ளது நன்றாக இருப்பதாகத் தோன்றுகிறது. அங்கிருந்து பார்ப்பவர்களுக்கு இங்கிருப்பது நன்றாக இருப்பதாகத் தோன்றுகிறது.ஆனால் எதிலுமே நிலையாக இருப்பதில்லை.
     

                     ஆசையில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்து எடுத்து விடுகிறோம்.இந்தப் பக்கம் அல்லது அந்தப் பக்கம். ஆனால் அதன் முடிவு தவறாகிப் போனால் கலங்கிப் போய் விடுகிறோம். எல்லாம் நாமாக உண்டாக்கிக் கொண்டது அல்லவா?.கடைசியில் எல்லாம் விதி என்று அதன் தலையில் போட்டு  விடுகிறோம். இந்த விளையாட்டு எல்லாம் வீண்.ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?இதுவா அல்லது அதுவா? முடிவை விதியின் கையிலேயே தந்து விடுங்கள். நீங்கள் எதையும் தேர்ந்தெடுக்க வேண்டாம். நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நடக்கட்டும். நல்லதாக இருந்தாலும் சரி.அல்லாததாக இருந்தாலும் சரி. நீங்கள் செய்யக் கூடியது எதுவும் இல்லை. 


                இவ்வாறு நீங்கள் எதையும் தேர்ந்தெடுக்காத போது நடப்பது தான் விதி. எல்லாம் தானாகவே நடக்கட்டும்.எல்லாம் ஏற்கெனவே எழுதப் பட்ட விதி அதை மாற்ற முடியாது. ஒரு சினிமா அல்லது ஒரு டிராமாவைப்  போல.ஏற்கெனவே கதையை எழுதி முடித்தாகி விட்டது ! எல்லாம் ஏற்கெனவே தீர்மானிக்கப் பட்டு விட்டது.முடிவு இப்படித்தான் என்று அதனை எழுதியவருக்குத்தான் தெரியும்.  கதை இப்படிச் செல்ல வேண்டும் என்று நீங்கள் தீர்மானம் செய்வது வீண். எல்லாம் முன்பே எழுதி  முடிக்கப் பட்டு விட்டது. நாம் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே.

              நீங்கள் இப்போதுதான் முதன் முதலாக ஒரு ஊருக்குச் செல்கிறீர்கள். ஆனால் அதற்கான பாதை ஏற்கெனவே போட்டாகிவிட்டது. நீங்கள் அந்தப் பாதையிலேயே செல்லவேண்டியது தான்.அடுத்தடுத்து எந்த ஊர் வரும்?மேடுவருமா,பள்ளம்வருமா? ஆற்றைத் தாண்ட வேண்டுமா? ட்ராபிக் ஜாம் ஆகுமா?எதுவும் தெரியாது.ஆனால் குறிக்கோள் நல்லபடி ஊர் சென்று சேர வேண்டும் என்பது தான். வகுக்கப் பட்ட பாதையை விட்டு வேறு பாதையை தேர்ந்தெடுப்பீர்களா? அப்படித் தேர்ந்தெடுத்தால் அது சரியாகவும் இருக்கலாம்.அல்லது தவறாகியும் போகலாம்.ஆனால் நீங்கள் அந்த ரிஸ்க் ஐ எடுக்க மாட்டீர்கள். ஏற்கெனவே போட்ட பாதை யில் தான் செல்வீர்கள்.

                                     நமது வாழ்க்கையும் அதே போலத்தான்.பிறப்பிலிருந்து இறக்கும் வரைக்கான  ஒவ்வொருவரது பாதையும் போட்டாகி விட்டது. நமது வேலை என்ன? அதில் பயணிப்பது தான்.நடுவில் தடத்தினை மாற்றிக் கொண்டு பிறகு துன்பம் வரும் போது ஏன் விதியின் மீது பழி போட வேண்டும்? இன்பமா வரட்டும்.துன்பமா அதையும் சந்திப்போம்.சண்டையா நடக்கட்டும்.சமாதானமா வந்துவிட்டுப் போகட்டும். நாம் எதையும் தேர்ந்தெடுக்க வேண்டாம். வாழ்க்கையை  அதன்போக்கில் விட்டு விடுவோம். ஒரு நதியைப் போல. நதி எதைப்  பற்றியும் கவலைப் படுவதில்லை. அதன் போக்கில் ஓடுகிறது.பள்ளமாக இருந்தாலும் சரி மேடாக இருந்தாலும் சரி.வளைந்து நெளிந்து சென்றாலும் சரி.அதற்கென  வகுக்கப் பட்ட பாதையிலேயே செல்கிறது.கடைசியில் கடலில் கலந்து விடுகிறது.  

            நாமும் அதைப் போல இருப்போம்.வாழ்கையை அதன் போக்கில் விட்டு விடுவோம். இன்பமென்று எதுவும் இல்லை.துன்பம் என்றும் எதுவும் இல்லை.மனம் என்னும் கோப்பையை காலி செய்து விடுவோம்..மனதை வெறுமையாக விட்டு விடுவோம் . எந்த எண்ணங்களும் வேண்டாம்.

                  மனதை மாற்றுங்கள். மகிழ்ச்சி பொங்கும்...என்றும் தங்கும்.!

 இன்னும் அலசுவேன்.....
                     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக