இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், நவம்பர் 26, 2012

ஸ்ரீரங்கம் ....பீட்சா... அமானுஷ்யம்...!

பீட்சா திரைப் படத்தை சமீபத்தில் பார்த்தேன்.அமானுஷ்யமாக நடப்பவைகளை    வைத்து அருமையாகப் படம் பண்ணியிருந்தார் கார்த்திக் சுப்பையா .இவருக்கு முதல் படமாம் ..வெரி குட்!பீட்சா கொடுக்கப் போகும் ஒரு வீட்டில் இரவில் நடந்ததாக ஒரு திகிலான பேய் த்ரில்லர் கதையை திக் திக் என நெஞ்சம் பதைக்கும்  வண்ணம் சொல்லியிருக்கிறார். அது வைரங்களுக்கு ஆசைப் பட்டு ஹீரோ புனையும் கட்டுக் கதை என்று சொல்லியிருந்தாலும் - கடைசியில் ஹீரோ கூறியவற்றைப் போலவே ஒரு வீட்டில் பேய் வருவதைப் போல படத்தை  முடித்திருப்பது நல்ல ட்விஸ்ட்.!

அது கிடக்கட்டும் இதைப் போலவே என் வாழ்க்கையிலும் நிஜமாக நடந்தது ஒன்றைக் கூறுகிறேன்.கேளுங்கள்.      

ஒரு இருபது  வருடங்களுக்கு முன் நாங்கள் குடியிருந்த ஸ்ரீரங்கத்து வீடு ஒரு பெரிய வீடு.முன் பக்கம் வீட்டுக் காரர் குடியிருக்க பின் பக்கம் நாங்கள் இருந்தோம். மீதி பாதி வீடு தோட்டத்துடன் கூடியது. அந்தக் கால வீடுகள் போலவே toilet எல்லாம் தோட்டம் தாண்டி புழக் கடையில் தான் மதிலை ஒட்டி இருக்கும். ஒரு நாள் எனது சித்தப்பா மகனுடன் நாங்கள் ஒரு கல்யாண விருந்துக்கு சென்று வந்தோம்.அப்போது மணி கிட்டத் தட்ட  இரவு 12 ஆகி விட்டது  பின் புறம் எங்கள் வீட்டிற்கு வர ஒரு சந்து இருக்கும். அது வழியாக நாங்கள் எங்கள் வீட்டிற்கு தோட்டத்தைத தாண்டி வரவேண்டும். இரவு நல்ல இருட்டு  நாங்கள் பட படப்புடன் இருட்டில் வந்த போது ஒரு மரத்தின் அடியில்   வெள்ளை உருவம்  ஒன்று மரத்தில் தொங்குவது போல இருந்தது. எங்களது சித்தப்பா  மகன் "ஐயோ பேய்!" என்று அலறியபடி ஓடினான்.நாங்களும் பார்த்தோம். வெள்ளையாக ஒரு உருவம் மரத்தில் தொங்கிய படி இருந்தது. கீழே பார்த்தால் கால்களைக் காணோம்..! எங்களுக்கும் பயம் வந்து அலறி அடித்து ஓடிவிட்டோம். எங்கள் சித்தப்பா பையனுக்கு பயத்தில் ஜுரமே வந்துவிட்டது !

காலை விடிந்த உடன் முதல் வேலையாக அவன்  ஊருக்கு கிளம்ப தயாராகி விட்டான்.   எங்கள்  அப்பாவிடம் நான் விஷயத்தைக்  கூறினேன். அவர்
 " அட பயந்தாங் கொள்ளிகளா,  நான் தான் அந்த மரத்தடியில் என் பனியனைக் காயப் போடிருந்தேன். அதைப் பார்த்து பயந்து விட்டீர்களா? எல்லோரும் போய் வேலையப் பாருங்கடா..!பேயாவது பிசாசாவது " என்றார்.அப்போது தான் எங்கள் பயம் நீங்கியது.!

ஆனால் சில நாட்கள் கழித்து தான் எனக்கு ஒரு உண்மை  உறைத்தது.   

எனது அப்பா என்றுமே பனியன் உபயோகித்தது  கிடையாது....!

2 கருத்துகள்:

Srirangam Nana சொன்னது…

அதான் பெரியவங்க எப்போதும் நல்லதுக்காக எதுவும் செய்வாங்க..சொல்லுவாங்க!
ஒரு சின்ன திருத்தம் ..உரைத்தது இல்லை உறைத்தது ..

Ragavmurali சொன்னது…

மிகவும் சரி. சிலசமயம் மொழி பெயர்ப்பில் இவ்வாறு வந்து விடுகிறது.இதோ மாற்றிவிட்டேன். நன்றி..!

கருத்துரையிடுக