இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, டிசம்பர் 16, 2011

மனம்.....9 !

           நமது மனம் தானே நம்மை எண்ணி எண்ணி ஏங்கச் செய்கிறது? தரையில் படுத்தால் கட்டில் - மெத்தை இல்லையே என்ற ஏக்கம். நடந்து சென்றால் ஒரு டூ வீலர் கூட இல்லையே என்ற ஏக்கம். நம்மை நிம்மதி இன்றி அலையச் செய்கிறது நமது மனம் ! 

           எனது நண்பர் ஒருவர் என்னிடம் "நான்   மிகவும் நேசித்த ஒரு பெண் ,அவளும் என்னை நேசிப்பதாகக் கூறி கடைசியில் என்னை ஏமாற்றி விட்டாள்.இப்போது வேறு ஒரு பையனை மணந்து கொள்ளப் போகிறாளாம். எனக்கு மனசே சரியில்லை. அவளை மறக்க முடிய வில்லை  தற்கொலை செய்து கொள்ளலாம் போல  இருக்கிறது "என்று என்னிடம் கூறி வருத்தப் பட்டார்..  எனக்கும் நன்றாகத் தெரியும்  அவர்கள் இருவரும் சேர்ந்து பழகியது,சுற்றியது  எல்லாம். அவள் ஈசி யாக மறந்துவிடு என்று சொல்லிவிட்டாள்,ஆனால் இவரால்  மறக்க முடியவில்லை.பாவம்.  
       
    அவரிடம்  நான் கேட்டேன்,"  நீங்கள்  அவளை மிகவும் நேசிக்கிறீர்கள்  அல்லவா? "

"ஆமாம் ."  

"அவள் மீது உயிரையே வைத்திருக்கிறீர்கள்  அல்லவா?"

"ஆமாம்"

 " அப்படியானால் அவள் அல்லவா வருந்த வேண்டும்? நீங்கள் ஏன்    தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? உன் போல தன மீது உயிரையே வைத்திருக்கும் ஒருவரை  வேண்டாம் என்றால் அது அவளுக்கு அல்லவா நஷ்டம்? நீங்கள்  ஏன் வருத்தப் படுகிறீர்கள் ?இது போல மனநிலை கொண்ட ஒருத்தியை நீங்கள்  மணந்து  கொண்டாலும் உங்களால்  நல்ல வாழ்க்கையை வாழ முடியாது.அவள் உங்களை  மணந்து கொள்ளாததைப் பற்றி பின்னாளில் நிச்சயம் வருந்துவாள்.நீங்கள் உங்கள்  மனதை மாற்றிக் கொள்ளுங்கள் .கொஞ்சம் கஷ்டம்தான்  என்றாலும் இதை நீங்கள் செய்தே ஆக வேண்டும் " என்று கூறி அனுப்பினேன்.
    
   காலத்தின் போக்கில் மனதை மாற்றிக் கொண்ட அவர்,  இன்று வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்.

    மனிதர்கள் பலரும் இது போலத்தான் மற்றவர்களின் நடத்தைகளை  எண்ணி  மனம் வருந்திக் கொண்டிருப்பார்கள்.அல்லது தங்களையும் அதே போன்ற-நேர்மைக்கு மாறான - நடத்தைக்கு மாற்றிக் கொள்வார்கள்!

         நான் மிகவும் மதிக்கும்  நண்பர் ஒருவர் தனக்காக ஒரு கட்டிடம்  எனது மேற்பார்வையில் கட்டித் தருமாறு கேட்டுக் கொண்டார்.அவருக்கு கட்டிடத்  துறையில் அவ்வளவாக யாரையும் பழக்கம் இல்லாத தால் என்னிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தார். நான் அப்போது வேறு ஊரில் வேலை செய்து கொண்டிருந்ததால் சனி மற்றும் ஞாயிறு மட்டுமே என்னால்  வந்து பார்க்க முடியும்.எனவே  எனது  நம்பிக்கைக்கு  உரிய, நேர்மையான   கட்டிடப் பொறியாளர் ஒருவரிடம் அந்தப் பொறுப்பைத் தந்தேன்.அவர் எனது கல்லூரி கால நண்பரும் கூட. அவர் அங்கிருந்தே அந்தக் கட்டுமான பணிகளை பார்த்துக் கொள்ள நான் விடுமுறை நாட்களில் அவருடன் சேர்ந்து ஆலோசனைகளை செய்து அந்தக் கட்டிடத்தை கட்டிமுடித்தோம்.
          
            மிகவும் நல்லமுறையில் அந்தக் கட்டிடம் முடிந்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது.  

               ஆனால் பிறகு  எனது நண்பர் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் போக்கு முற்றிலும் மாறியது! அவர்களும் எனது பொறியாளர்  நண்பரும் சேர்ந்து தான் அந்தக் கட்டிடத்தைக்  கட்டியது போலவும் எனக்கு அதில் எந்த விதமான தொடர்பும் இல்லாதது போலவும் காட்ட ஆரம்பித்தனர். பின்னாளில் என்னைப் பற்றி யாரோ சிலர் அவர்களிடம் தவறாகக் கூற என்னிடம் பேசுவதையும் நிறுத்திக் கொண்டனர்!

           ஒரு சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் வீட்டில் ஒரு விசேஷம் நடந்தபோது  என்னை அழைக்காமல் மற்ற அனைவரையும் ,-அந்தப் பொறியாளர் நண்பர் உட்பட- அழைத்து விருந்து வைத்தனர். இதைப் பார்த்த எனது பிற நண்பர்கள் "உன்னைக் கூப்பிடவில்லையா ?அவர்களுக்கு நீ அறிமுகம் செய்து வைத்த  அந்தப் பொறியாளர் கூட  வந்திருந்தாரே, உனக்கு அழைப்பு இல்லையா? .உனக்கு அதில் வருத்தமாக இல்லையா? என்று கேட்டனர்.    

       நான் கூறினேன்."நான் எதற்கு வருத்தப் பட வேண்டும்?என்னைப்  பொறுத்த வரையில் நான் அவர்களுக்கு எந்தத் தீங்கினையும் செய்யவில்லை.அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் இன்று வரை நினைக்கிறேன் .இன்றும் அவர்கள் மீது மரியாதை வைத்திருக்கிறேன். என்னைக் கூப்பிடாத செயலால் அவர்கள் தான் வருத்தப்  பட வேண்டும்.நான் நானாகவே இருக்கிறேன்.அவர்கள்  தான் மாறிவிட்டனர். எனவே கவலைப் பட வேண்டியது அவர்கள் தான்- நான் அல்ல !" என்றேன்.
        
            நிறைய பேர்  இப்படித்தான். அவர் அப்படிச் சொன்னார்.இவர் இப்படிச் சொன்னார் .அவன் மட்டும் அப்படி இருக்கலாமா ?இவன் மட்டும் இப்படிச் செய்யலாமா?நான் மட்டும்  எதற்கு அப்படிச் செய்ய வேண்டும்? எனக்கென்ன தலை எழுத்து?என்று மற்றவர்களின் நடத்தையினைப் பற்றிக் கூறி, நேர்மையிலிருந்து தடம்  மாறி மனசாட்சிப் படி செய்யவேண்டியதைக் கூட செய்யாமால் இருந்து விடுகின்றனர்.

              மற்றவர்களுக்காக நீங்கள் ஏன்  மாற வேண்டும்?உங்கள் மனசாட்சி என்ன சொல்கிறதோ அதன் படி நடந்து கொள்ளுங்கள்.யாருக்காகவும் உங்கள் மனது சொல்லும் நல்லவைகளை செய்யாமால் இருந்து விடாதீர்கள்.

                ரோஜா என்றும் மென்மையாகவே தான் இருக்கிறது.முள் அருகினில்  இருப்பதைப் பார்த்து ரோஜாவும் முள்ளாக மாறி விடுவதில்லை. 

          நீங்களும் நீங்களாகவே இருங்கள். மற்றவர்களைப் பார்த்து நீங்களும்  முள்ளாக மாறவேண்டாம்.!

       மனதை  மாற்றுங்கள் ...... மகிழ்ச்சி பொங்கும்...என்றும் தங்கும்....!    

   இன்னும் அலசுவேன்....!      

2 கருத்துகள்:

Srirangam Nana சொன்னது…

இது மனம் இல்லை ,நறு மணம் ..! அருமையான எண்ணங்களின் பதிவு

Ragavmurali சொன்னது…

உங்கள் கருத்துரைக்கு எனது நன்றி நானா அவர்களே....!

கருத்துரையிடுக